"கேஎஸ்.அழகிரி பதவி விலகினாதான் எல்லாம்!” - நீயா நானா யுத்தத்தில் காங்.? #DigitalExclusive

"கேஎஸ்.அழகிரி பதவி விலகினாதான் எல்லாம்!” - நீயா நானா யுத்தத்தில் காங்.? #DigitalExclusive
"கேஎஸ்.அழகிரி பதவி விலகினாதான் எல்லாம்!” - நீயா நானா யுத்தத்தில் காங்.? #DigitalExclusive
Published on

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்றாலே உட்கட்சி பூசல்கள் என்று பலரும் விமர்சித்த போதிலும், “அது எங்கள் ஜனநாயகத் தன்மை. கருத்துக்களை சுதந்திரமாக பரிமாறிக் கொள்கிறோம். வெளிப்படையாக இருக்கிறோம்” என்று கட்சி நிர்வாகிகள் விளக்கம் கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால், நவம்பர் 15 ஆம் தேதி சத்திய மூர்த்தி பவனில் நிகழ்ந்த சம்பவம் சற்றே எல்லை மீறி சென்று ரத்த காயம் வரை சென்றது.

2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான நடைபெற்ற அந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. போர்க்களம் போல் காட்சியளிக்கும் அளவிற்கு சென்றது அந்த மோதல். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுக்கும், கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த இந்த மோதலில் சிலருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது.

மோதல் நிகழ்ந்த அந்த நாளை காட்டிலும் அடுத்தடுத்து வந்த நாட்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உள்ள உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சமாகி டெல்லி தலைமை வரை படையெடுத்தது. இந்த மோதல் தொடர்பாக விளக்கம் அளிக்க கட்சியின் மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன், எஸ்சி அணித் தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோர் 24-ம் தேதி நேரில் ஆஜராகும்படி கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதையடுத்து முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. விசுவநாதன் ஆகியோர் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து கே.எஸ்.அழகிரி தலைமை குறித்து புகார் செய்ததோடு, அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். சும்மா விடுவாரா அழகிரி.. தன் தரப்பு 11 எம்.எல்.ஏ.க்கள் டெல்லிக்கு அனுப்பினார். அவர்கள் கார்கேவை சந்தித்து அழகிரியை மாற்றக்கூடாது என்று வற்புறுத்திவிட்டு வந்தார்கள்.

இதற்கிடையே ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அதிரடியாக ரத்து செய்தார். இதனால் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கும், தினேஷ் குண்டுராவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இதையடுத்து தினேஷ் குண்டுராவையும், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியையும் டெல்லி மேலிடம் நேரில் அழைத்து விளக்கம் கேட்டதாக சொல்லப்படுகிறது. கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து விட்டதாலும் எதிர்ப்பின் காரணத்தாலும் அவர் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால், தன்னை மாற்றினாலும் பரவாயில்லை என்று அழகிரி தெரிவித்துவிட்டார்.

சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீ வெள்ள பிரசாத் முன்னிலையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர், “தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சிக்கு முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லையே?” என்ற கேள்வியை அழகிரியிடம் எழுப்பினர். அதற்கு, “தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் இதற்கான பதிலை நான் சொல்ல மாட்டேன்” என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

இதனிடையே, கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறும் கூட்டங்களில் மூத்த தலைவர்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்பாதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக புதிய தலைமுறை செய்தியாளர் செந்தில் கரிகாலன் எழுப்பிய கேள்விக்கு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அளித்த பதில்கள்:

`இந்திரா காந்தி பிறந்தநாள், கக்கன் சிலை திறப்பு, மாவட்ட தயாரிப்பாளர்கள் கூட்டம் போன்றவற்றில் நீங்கள், இவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு ஆகியோர் புறக்கணிப்பதாக சொல்லப்படுகிறதே... அது உண்மையா?’

“நாங்கள் புறக்கணிக்கவில்லை. சொல்லப்போனால் காங்கிரஸ் பேரியக்கத்தை யாரும் புறக்கணிக்க முடியாது. இந்திரா காந்தி அவர்களின் நிகழ்ச்சியை பொறுத்துவரைக்கும் நாங்கள் கலந்துக்க போகும் முன்னரே காங். மாநிலத்தலைவர் மாலை அணிவித்துவிட்டு சீக்கிரமாக அங்கிருந்து சென்றுவிட்டார். எங்களுக்கும் கொஞ்சம் காலதாமதமாகிவிட்டது. ஆனால் நாங்கள் அனைவரும் சென்று இந்திராகாந்தி அம்மா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்திவிட்டு, பின் மாலை அணிவித்துவிட்டு, பத்திரிக்கையாளர்களை சந்தித்து அன்னை இந்திரா காந்தி அவர்களுடைய அருமை பெருமை, அவருடைய தியாகம், வரலாற்றை பேசிவிட்டு வந்தோம். அன்றைய தினம் கட்சியினரிடையேகூட அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை.

அவர்களுடைய கருத்தரங்கில் கலந்துகொண்டீர்களா?

இல்லை. ஒரு விஷயம் சொல்ல நினைக்கிறேன். கட்சிக்குள், சில விஷயங்களில் எல்லோருக்கும் ஒரு கருத்து வேறுபாடு இருக்கிறது என்பது உண்மை. அதை மறுக்கமுடியாது. இந்த கருத்து வேறுபாடு என்பது முன்னாள் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்கள் கிருஷ்னசாமி ஆகட்டும், தங்கபாலுவாகட்டும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகட்டும், அண்ணன் திருநாவுக்கரசாகட்டும்... எல்லோருக்கும் கட்சி தலைமை மேல் கருத்துவேறுபாடு இருக்கிறது. அழகிரி மேல் கருத்துவேறுபாடு இருக்கிறது.

ஆனால் காங்கிரஸ்ஸை பொறுத்தவரை தலைவருக்கு நிகரான அதிகாரம் சட்டமன்ற கட்சி தலைவருக்கு இருக்கிறது. குறிப்பாக கர்நாடகாவை எடுத்துக்கொண்டால் டிகே சிவக்குமார் அவர்கள் தலைவராக இருக்கிறார் என்றால் சட்டமன்ற கட்சித்தலைவர் சித்தாராமையா இருவரும் சேர்ந்து தான் முடிவெடுப்பார்கள். அதுதான் காங்கிரஸ் உடைய இரட்டை தலைமை என்பது. ஒன்று சட்டமன்ற கட்சி தலைவர், மற்றொன்று காங்கிரஸ் தலைவர் என இருவரும் இணைந்து தான் செயல்படுவார்கள், இணைந்து தான் முடிவெடுப்பார்கள்.

அப்படித்தான் இங்கும் நிலை உள்ளது. இதுவரை உள்ளாட்சி அமைப்பாகட்டும், நகராட்சி அமைப்பாகட்டும், மாநகராட்சியாகட்டும் இரண்டுபேரும் சேர்ந்து தான் கொடுக்குறோம். ஆனால் கருத்து வேறுபாடு உண்டு, என்னை பொறுத்தவரையில், தலைமை மேல் நிறைய சங்கடங்கள் இருக்கிறது, கொஞ்ச நஞ்சம் அல்ல... நிறையவே இருக்கிறது. அதில் நான் அதிகம் சங்கப்பட்டது கட்சித்தொண்டர்களை அடித்து, உதைத்து அவர்களை ரத்தம் சிந்தவிட்டதுதான். சரி இந்த சம்பவம் நடந்தது தவறாக நடந்துவிட்டது என்று இருந்திருக்கலாம், ஆனால் அந்த தவறை மடைமாற்றம் செய்வது என்பது இருக்கிறதில்லையா... தவறை தான் செய்துவிட்டு அதை மறைத்து விடலாமா, இல்லை வேறு யார்மேலயாது சகதியை வாரி இறைக்கலாமா என செய்த முயற்சிகள் தான் என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.

இந்த நிகழ்வுகளை பொறுத்தவரை, அன்னை இந்திராகாந்தி பிறந்தநாளுக்கு நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரைக்கும் இதில் சரியான தகவல்கள் வெளியே தெரிவிக்கப்படவில்லை. ஏனெனில், அன்றைய தினம் நான் நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நாள் நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டுவிட்டேன். அங்கு நான் புகழஞ்சலி செலுத்தி தொண்டர்களோடு நான் இனிப்புகளை வழங்கி கலந்துகொண்டேன். அதுக்கு முன்னர் நடந்த நிகழ்வில் நான் புதுடெல்லியில் இருந்தேன். அதனால் தான் வரமுடியவில்லை. இப்படி என்னை பொறுத்தவரைக்கும் சூழல்களால்தான் என்னால் வர முடியவில்லை. மற்றபடி என்னால் என் கட்சியை விட்டுக்கொடுக்க முடியாது.

அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதை கேட்டுகொள்வேன். மற்றபடி சங்கடங்களும் மனவருத்தங்களும் இருப்பது உண்மை தான். அதை மறுக்கமுடியாது, நான் உண்மைக்கு புறம்பாக எதுவும் பேசவும் விரும்பவில்லை. இது ஒரு ஜனநாயக கட்சி. இதில் எல்லோரையும் அரவணைத்து செல்லவது தான் ஒரு தலைவர் பண்பு, தலைமை பண்பு. மற்றபடி முன்னாள் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்கள் கிருஷ்னசாமி ஆகட்டும், தங்கபாலுவாகட்டும், ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகட்டும், அண்ணன் திருநாவுக்கரசாகட்டும் நேராக சொல்லிவிட்டார்கள் எங்களால் வரமுடியாது என்று.

தலைமை மாற வேண்டும் என்பது உங்களுடைய கோரிக்கையாக இருக்கிறதா?

இல்லை என்னுடைய கோரிக்கை அது இல்லை, அது முன்னாள் தலைவர்களுடைய கோரிக்கையாக இருக்கிறது. நான் அப்படி சொல்லவும் இல்லை, சொல்லவும் கூடாது. என்னை பொறுத்தவரை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வழிகாட்டி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதற்கு கட்டுப்படுவேன்” என்றார்.

இதைத்தொடர்ந்து காங். ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணாவிடம் நம் நிருபர் பேசினார். அந்த உரையாடல்:

“காங்கிரஸில் மூத்த தலைவர்கள் பலரும் கூட்டங்களை புறக்கணிப்பதாக சொல்லப்படுவது உண்மையா?” 

“மூத்த காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணிப்பதற்கான காரணங்கள் என்னவென்று தெரியவில்லை, முதலமைச்சர் கலந்துகொண்ட மாமனிதர் நேரு புத்தக வெளியீட்டு விழா, பின் கக்கன் சிலை திறப்பு விழா, அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின் படி, இந்திய ஒற்றுமை பயணத்தின் தொடர் நடவடிக்கையாக பரப்புரை மேற்கொள்ளவேண்டும் என்று செயல் திட்டம் வகுத்து, அதுகுறித்து விவாதிக்க மாவட்ட கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடந்தது. இது எல்லாவற்றிற்க்குமே மூத்த தலைவர்கள் முறையாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து புறக்கணிச்சிட்டு வராங்க, அதனால் இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் தான் முடிவெடுக்கவேண்டும்”

“இதை பற்றி புகார் ஏதும் தெரிவிக்கப்பட்டுள்ளதா?”

“அது தெரியவில்லை, புகார் கொடுத்தார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் இதற்கான முடிவை அகில இந்திய காங்கிரஸ் தான் எடுக்க வேண்டும்” என்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com