சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். இவரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்றார்.
இந்நிலையில் நீதிபதி தஹில் ரமாணியின் நீக்கத்திற்கான காரணம் குறித்து ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “நீதிபதி தஹில் ரமாணியை மாற்றுவதற்கு மூன்று காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. முதலில், நீதிமன்றத்தில் தஹில் ரமாணி குறைவான நேரம் வேலை பார்த்தது ஒரு காரணமாக கருதப்படுகிறது. ஏனென்றால், இந்தியாவிலுள்ள ஒரு முக்கியமான உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய தஹில் ரமாணி ஒரு சில நாட்கள் மதியத்திற்கு மேல் பணி செய்வது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இரண்டாவது, அவர் திடீரென நீதிமன்ற அமர்வுகளை கலைத்தது ஒரு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிலை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிக்க இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமைத்திருந்தார். இந்த அமர்வை கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி தலைமை நீதிபதி தஹில் ரமாணி கலைத்து உத்தரவிட்டார். இந்த அமர்வு சிலை கடத்தில் வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது. அத்துடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை நியமித்தது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது, அவருக்கும் மாநிலத்திலுள்ள ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட முற்பட்டதும் இவர் சென்னையில் இரண்டு சொத்துகள் வாங்கியதும் காரணமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஏனென்றால் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திலுள்ள 58 நீதிபதிகளில் 15 பேர் மட்டுமே தங்களது சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் சொத்து விவரங்களை வெளியிடவில்லை” எனவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.