இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான நபர்கள் நாட்டிற்கு நல்லது அல்ல என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...
ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் பெருமைப்பட வேண்டிய நாள். இந்தியாவை உருவாக்கிய மாபெரும் சக்தி அவர். விவசாயம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு நேரு நிறுவிய கொள்கை தான் காரணம். நேரு இந்தியாவின் தலைமை பொறுப்பை ஏற்காமல் இருந்திருந்தால் இந்தியா பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் போன்ற மோசமான நிலைக்கு வந்திருக்கும்.
நேரு அன்று பொதுத்துறை என்ற அற்புதத்தை உருவாக்கினார். இன்று தனியார் மயம் செய்கிறார்கள். ஒருவர் உருவாக்கினார் ஒருவர் விற்கிறார். இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்தியாவை கட்டமைக்கும். மீண்டும் இந்தியாவை மேம்படுத்துவோம் இந்தியாவை இந்திய மக்களின் நாடாக மாற்றுவோம் என்றவரிடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.எஸ் அழகிரி...
கொலைகாரர்களை வெளியே உலாவவிடுவது தவறு. 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இஸ்லாமியர்கள் சந்தேகத்தின் பேரில் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யாதது ஏன்?
இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை நாட்டிற்கு நல்லதல்ல. கூட்டணி வேறு கொள்கை வேறு காங்கிரஸ் - திமுக இடையே கொள்கையில் கருத்து வேறுபாடு இருக்கும். மதசார்பின்மை என்ற நேர்கோட்டில் பயணிக்கிறோம்.
திமுக கூட்டணியில் இருந்தாலும் அழுத்தம் கொடுக்க முடியாது. சிறையில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை விடுதலை செய்யக் கோரி திமுக அரசை தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்திவீர்களா?என்ற கேள்விக்கு... கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூட்டணி வேறு கொள்கை வேறு என கே.எஸ் அழகிரி பதில் அளித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.