ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் அகழாய்வு தொடங்கி 30 வருடங்களாகியும் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அழகன்குளம் கிராமம் வைகை ஆறும், வங்காள விரிகுடா கடலும் சங்கமிக்கும் இடமாக அமைந்துள்ளது. சங்க காலங்களில் அழகன்குளம் கிராமம் கடல் வழி வணிக செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் பல பழமையான பொருள்கள் கிடைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ் கிராமிய எழுத்துக்கள், மணிகள், சோழ நாணயங்கள், ரோமன் உடனான வணிகம் ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் 1980-1987, 1990-1991, 1993-1994, 1995-1996, 1997-1998, 2014-2015, 2017 என பல முறை அகழாய்வு நடைபெற்று உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் கிடைக்கப்பெற்ற அகழாய்வுப் பொருட்களை வயதை கண்டுபிடிக்கக்கூடிய கார்பன் முறை மூலம் சோதனை செய்ததில் கிமு 345, கிமு 268, கிமு 232 வருடங்களுக்கு முன்பு உள்ளது என தெரியவருகிறது. அழகன்குளம் கிராமத்தை அகழாய்வு செய்தவன் மூலம் 4 விதமான நூற்றாண்டுகளில் மக்கள் வாழ்ந்ததற்கான பொருட்கள் கிடைக்கப்பட்டுள்ளது.
எனவே, ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் கிடைக்கப்பெற்ற அகழாய்வு பொருள்களைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்கவும், 1980-1987, 1990-1991, 1993-1994, 1995-1996, 1997-1998, 2014-2015, 2017 ஆகிய காலங்களில் அழகன்குளம் கிராமத்தில் நடைபெற்ற அகழாய்வு குறித்த இறுதி அறிக்கையை வெளியிடவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அகழாய்வு தொடங்கி 30 வருடங்களாகியும் இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
தமிழக தொல்லியல்துறை தரப்பில், ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் அகழாய்வு தொடர்பாக முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வு குறித்த அனைத்து அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு குறித்து தமிழ்நாடு தொல்லியல்துறை செயலர், தமிழக தொல்லியல்துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.