தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநில மனித உரிமைகள் ஆணையம் இணைந்து, தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநில அரசுகளுக்கு இடையிலான 'புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு'க்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதியரசர் பாஸ்கரன், ஒடிசா மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் சத்ருஹன புஜாரி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், ஒடிசா மற்றும் தமிழ்நாட்டு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் மனித உரிமைகள் ஆணையத்தின் நீதிபதி பாஸ்கரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு, ஒடிசா மாநில அரசுகளுக்கு தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இது குறித்த கருத்துரு இரு மாநில அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் பெற்று புரிந்துணர்வு ஒப்பத்தம் கையெழுத்தாகும். இதன் மூலம், இரு மாநில தொழிலாளர்களும் பலனடைவார்கள். குறிப்பாக, ஒடிசா மற்றும் தமிழக தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்றார்.
அவரிடம், கலாஷேத்ரா பாலியல் விவகாரம் மற்றும் அம்பாசமுத்திரம் டிஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்க பதிலளித்த அவர், “இவ்விரு விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.