உடுமலைப்பேட்டை அருகே உள்ள வனத்தில் குழியில் தவறி விழுந்த குட்டி யானையை மீட்டு தாய் யானையிடம் வனத்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகத்தில் திருமூர்த்தி மலை வனப்பகுதியில் யானைகள் நீர் தேடி வருவது வழக்கம். அப்படி குடிநீருக்காக வரும் வழியில் பாறைகளின் இடையே 4 மாத குட்டி ஒன்று தவறி விழுந்தது. குழியில் விழுந்த தன்னுடைய குட்டியை மீட்க தாய் யானை நீண்ட நேரம் போராடியுள்ளது.
தாய் யானையின் போராட்டத்தை அப்பகுதி மக்கள் பார்த்து கலங்கினர். இதனையடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். யானையின் தவிப்பை புரிந்துக்கொண்ட வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். இதற்கடுத்து குழிக்குள் மாட்டிக்கொண்டிருந்த 4 மாத குட்டி யானையை நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்டர்.
4 மாதம் யானை என்பதால் பார்ப்பதற்கே சற்றே மெலிதாக இருந்தது. பள்ளத்தில் விழுந்து பயத்தில் இருந்த குட்டி யானைக்கு முதலுதவி அளித்தனர். பின்பு குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்த்தனர். தன்னுடைய குட்டி பத்திரமாக மீட்கப்பட்டதையடுத்து தாய் யானை தனது குட்டியுடன் மகிழ்ச்சியாக காட்டுக்குள் சென்றது.
வனத்துறையினர் இந்த முயற்சியை வீடியோவாக எடுத்துள்ளனர். அவர்களின் மீட்பு முயற்சியும், தாய் யானையின் தவிப்பும், குட்டி யானையின் பாசப் போராட்டமும் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.