“விடிய விடிய லத்தியால் அடித்துள்ளனர்” - சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டின் அதிர்ச்சி புகார்!

“விடிய விடிய லத்தியால் அடித்துள்ளனர்” - சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டின் அதிர்ச்சி புகார்!
“விடிய விடிய லத்தியால் அடித்துள்ளனர்” - சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டின் அதிர்ச்சி புகார்!
Published on

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஒட்டு மொத்த இந்தியாவே இந்தச் சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாகவே முன்வந்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், தான் கேட்ட தரவுகளை தர மறுத்ததாகவும், அங்கு விசாரணைக்கு சென்றபோது என்ன நடந்தது என்பது குறித்தும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜெயராஜும், பென்னீஸும் விடிய விடிய சாத்தான்குளம் காவல்நிலையத்தில் லத்தியால் தாக்கப்பட்டுள்ளனர். அதன்பின்னர் ரத்தக்கறை பதிந்த லத்திகளை போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர். லத்திகளை ஒப்படைக்குமாறு கேட்டபோதும் போலீசார் கொடுக்க மறுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பிறகே லத்திகளை ஒப்படைத்தனர்.

ஞாயிறு மதியம் 12.30 மணிக்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகிய 2 அதிகாரிகள் இருந்துள்ளனர். அப்போது பாரதிதாசன் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என குமார் கூறியுள்ளார். பின்னர் காவல் நிலையத்தின் அன்றாட நிகழ்வுகள் குறித்த பதிவேட்டையும் தர மறுத்துள்ளனர். பிறகு பாரதிதாசன் எச்சரிக்கை விடுக்கவே நேர விரயம் செய்துகொண்டே ஆவணங்களை ஒவ்வொன்றாக கொடுத்துள்ளனர். காவல்நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை மாஜிஸ்திரேட் பாரதிதாசன் கேட்டபோது தினமும் இரவு அதனை அழித்துவிடுவோம் என போலீஸார் மழுப்பியுள்ளனர்.

அதேபோல் ஜெயராஜ், பென்னீஸ் சம்பவம் தொடர்பாக காட்சிகளையும் அழித்துள்ளனர். முதலில் கான்ஸ்டபிள் மகாராஜன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பாரதிதாசன் விசாரணையை தொடங்கியுள்ளார். அப்போது தான் அவர் ''உன்னால் ஒண்ணும் புடுங்க முடியாது'' எனக் கூறியுள்ளார். உன்னுடைய லத்தி எங்கே என பாரதிதாசன் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த மகாராஜன், லத்தி ஊரில் உள்ளது. லத்தி, காவலர் குடியிருப்பில் உள்ளது என மாறி மாறி குழப்பியுள்ளார். கடைசியில் லத்தியே என்னிடம் இல்லை எனக் கூறியுள்ளார். விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது காவலர் ஒருவர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே ஓடியுள்ளார்.

19ம் தேதி இரவு காவல் நிலையத்தில் தலைமை காவலர் ரேவதி இருந்துள்ளார். சக போலீஸாரின் நடவடிக்கைகளால் அதிர்ந்து போயிருந்தார் அவர். உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என மாஜிஸ்திரேட் உறுதி அளித்த பின்னர் தான் அவர் உண்மைகளை தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் காவல்நிலையத்தின் வெளியே இருந்த போலீசார் நீதி விசாரணை செய்யும் அதிகாரிகளை கடும் சொற்களைக் கூறி திட்டியுள்ளனர். சிலர் மாஜிஸ்திரேட் விசாரணையை செல்போனில் பதிவு செய்துள்ளனர். அங்கிருந்த ஒவ்வொரு நிமிடமும் நிலைமை மோசமாகிக் கொண்டே சென்றதுடன், பாதுகாப்பு இல்லாத ஒரு உணர்வுக்கு பிறகே மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com