மருத்துவ படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு

மருத்துவ படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு
மருத்துவ படிப்புகளில் ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று பிற்பகல் தீர்ப்பு
Published on

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான திமுகவின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று பிற்பகல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மத்திய அரசுத்தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு நியமிக்கப்பட்டு, அதன் பரிந்துரை அடிப்படையில், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற அவமதிப்பு ஏதும் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யவே குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், மத்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் நீண்ட போராட்டங்களுக்கு பின் கிடைத்த இடஒதுக்கீட்டை பறிக்க கூடாது எனவும் திமுக தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, இன்று பிற்பகல் தீர்ப்பளிக்க உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com