இந்து சமய அறநிலையத்துறை சார்பான தொலைக்காட்சியில் கோவில் நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்தால் தமிழர்களின் கட்டிட திறமைகள், சிறப்புகளை அனைவரும் அறிந்து கொள்ள இயலும். எனவே தொலைக்காட்சி தொடங்குவது வரவேற்கத்தக்கதே என இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிய தொலைக்காட்சி தொடங்க தடை கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட 36 ஆயிரம் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் மொத்தம் 100 காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். மற்ற கோவில்களில் பாதுகாவலர்கள் நியமிக்கப்படவில்லை.
மேலும் பெரும்பாலான கோவில்களில் தேவையான பணியாளர்கள்கூட நியமிக்கப்படவில்லை. பழமையான கோவில்களில் நடைதிறப்பு, தூய்மை பணி, கோவில் பராமரிப்பு பணி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் கோவிலின் அர்ச்சகர்களே மேற்கொள்கின்றனர்.
சில கோவில்களில் மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால் சிலை கடத்தல், உண்டியல் திருட்டு நடைபெறுகிறது. இதனை தடுக்க தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும். இதுவே பிரதானமான பணிகளாக உள்ளது. எனவே இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் போதிய பாதுகாவலர்கள் நியமனம், பணியாளர்களின் ஊதியம் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை வழங்கிய பின்பு தமிழக அரசு அறிவித்தபடி திருக்கோவில் தொலைக்காட்சி தொடங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், இந்து சமய அறநிலையத்துறை தொலைக்காட்சி தொடங்க 7 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால் கோவில்களுக்கு தேவையான பணியாளர்களை நியமனம் செய்யாமல் உள்ளது கோயில் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது உரிய சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது என கூறினார்.
அப்போது நீதிபதிகள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு என தனி தொலைக்காட்சி உள்ளது. கோவில்கள் பற்றி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தால் தமிழர்களின் கட்டட திறமைகளின் சிறப்புகளை எடுத்து கூறமுடியும். எனவே தொலைக்காட்சி தொடங்குவது என்பது வரவேற்கத்தக்கதே என கருத்து கூறினர். மேலும், கோவில் பணியாளர்களின் ஊதியம் தொடர்பான வழக்குகளோடு சேர்த்து டிச.2ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டுள்ளனர்.