மரங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி அமைப்பதற்கு தொழில்நுட்பம் இருக்கும்போது, மரத்தை ஏன் வெட்டுகிறீர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
திருச்சியை சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருச்சி திருவனைக்கோயில் முதல் சுங்கச்சாவடி சாலை வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் மற்றும் வடிகால் நடைபாதை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது.
திருவனைக்கோயில் முதல் சுங்கச்சாவடி சாலை வரை உள்ள பகுதி முக்கிய சாலை அல்ல. இந்த சாலை 70 அடி அகல பாதையாகும். இந்த சாலை பெரிய வாகனங்கள் முதல் சிறிய வாகனங்கள் வரை செல்வதற்கு எதுவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் அமைந்துள்ள மரங்கள் 40 ஆண்டுகள் பழமையானவை. இதனை வெட்டுவதால் காற்று மாசுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எனவே, திருவனைக்கோயில் முதல் சுங்கச்சாவடி சாலை வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் மற்றும் வடிகால் நடைபாதை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, "மரங்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி அமைப்பதற்கு தொழில்நுட்பம் இருக்கும்போது மரத்தை ஏன் வெட்டுகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பி வழக்கு குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.