சென்னை உயர் நீதிமன்றத்தின் சென்னை முதன்மை அமர்விலும், மதுரை கிளையிலும் உள்ள நீதிபதிகளை சென்னையிலிருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து சென்னைக்கும் மாற்றி அமைப்பதும், அவர்கள் விசாரிக்கும் வழக்குகளின் தன்மையை மாற்றி அமைப்பதும் நீதிமன்றத்தின் நடைமுறை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நடைமுறையை போட்ஃபோலியோ ரொடேசன் என்று சொல்வார்கள்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாத சுழற்சிக்கு பிறகு, இந்த ஆண்டு மார்ச் மாதம் சுழற்சி முறையில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மார்ச் மாதம் மாற்றியமைக்கப்பட்ட பட்டியல்படி விசாரணை நடைபெற்ற நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் இறுதியில் நீதிமன்றம் மூடப்பட்டது. ஆனாலும், இணைய வழியில் வழக்குகளை மே மாத கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்ட நிலையிலும் அவசர வழக்குகளை மட்டும் விசாரித்து வந்தனர்.
வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என பார் கவுன்சிலும், வழக்கறிஞர் சங்கங்களும் கோரிக்கை வைத்தன. அதன் அடிப்படையில், அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ஒப்புதல் அளித்ததுடன், நீதிமன்றங்களை திறக்க முடியாது எனவும், காணொலி காட்சி மூலமாக விசாரிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி ஜூலை 6ஆம் தேதி முதல் சென்னையில் இரு நீதிபதிகள் அடங்கிய 6 அமர்வுகளும், 27 தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிக்க உள்ளதாகவும், மதுரைக் கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட 2 அமர்வும், 9 தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிக்க உள்ளனர். அதில் நீதிபதிகளுக்கு ஒதுக்கிய வழக்கின் பிரிவுகளின்படி, சென்னையில் இருந்த நீதிபதி எம்.சத்யநாராயணன் மதுரைக்கு செல்கிறார், அதேபோல மதுரையில் உள்ள பி.என்.பிரகாஷ் சென்னைக்கு வருகிறார்.
வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறைதான் இது. அதன்படியே நீதிபதிகள் மாற்றப்படுகின்றனர். இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரிக்கும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு சென்னைக்கு திடீர் இடமாற்றம் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை. அது வழக்கமான நடைமுறைதான். அத்துடன் இதுவரை இந்த அமர்வு விசாரித்த வழக்குகளை நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு இனி விசாரிக்கும்.