அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கூலித் தொழிலாளி குடும்பத்தில் பிறந்திருந்தாலும், முதுகலை அறிவியலில் வேதியல் பட்டம் முடித்துள்ளார் அனுசுயா. பெற்றோருடன் அக்கா, தம்பி என மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் வளர்ந்த அனுசுயாவின் வாழ்க்கை காதல் திருமணம் கொண்ட பின்னர், காதலை ஏற்க மனமில்லாத ஒரு சாதிய வன்மம் கொண்ட ஒருவரால் சின்னாபின்னமாய் சிதைந்துவிட்டது.
மனம் திருந்தியது போல நடித்து வீட்டிற்கு வரவழைத்து அந்த இளஞ்ஜோடியை பெற்ற மகனென்றும் பாராமல் சாதிய ஆணவத்தால் தண்டபாணி அரிவாளால் கண்மூடித்தனமாக கொடூரமாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு ஆணவக்கொலை நடந்த அதிர்வலைகள் ஓயாத நிலையில் மீண்டும் நிகழ்ந்துள்ளது அடுத்த சம்பவம்.
மனம் திருந்தியது போல் வீட்டிற்கு வரவழைத்த தண்டபாணி, அனைவரும் சாப்பிட்டுவிட்டு உறங்கியபோது மகன் சுபாஸையும் மருமகள் அனுசுயாவையும் சரமாரியாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த தன்னுடைய மனைவியையும் அவர் வெட்டியுள்ளார். இதில், சுபாஸ் மற்றும் அவரது தாயும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். வெட்டுக் காயங்களோடு உயிர்தப்பினார் அனுசுயா.
தற்பொழுது மேல் சிகிச்சைக்காக அனுசுயா சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தங்க கார்த்திகா சுமார் இரண்டு மணி நேரம் அனுசியாவிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
மாமனார் வெட்டியது குறித்து பலத்து காயங்களுடன் அனுசுயா பேசிய காட்சிப்பதிவு வெளியான நிலையில், இது குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
”அனுசியாவின் நிலையைக் கண்டு குடும்பத்தினர் நிலை குலைந்து கிடக்கின்றனர். தங்கள் வீட்டில் இருந்தபோது ஒரு குண்டூசி கூட அனுசுயா மீது பட்டதில்லை. இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்து லேசான காயம் பட்டதற்கே ரூபாய்க்கு 18 ஆயிரம் வரை செலவு செய்து சரி செய்தோம். தற்போது இப்படி வெட்டுப்பட்டு கிடப்பதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” என்று கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கிறார் அனுசுயாவின் தம்பி புஷ்பராஜ்.
தலை கைகள் மணிக்கட்டு என பல இடங்களில் வெட்டப்பட்டுள்ள அனுசியாவிற்கு அறுவை சிகிச்சை செய்தாலும் மீண்டும் கைகள் பழைய நிலைக்கு வருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாகவும், எனவே முதல் கட்ட அறுவை சிகிச்சையிலேயே மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் புஷ்பராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தண்டபாணியின் இந்த கொடூர செயல் ஒரு சைக்கோவின் நடவடிக்கை போலவே உள்ளதாகவும் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் இனி ஆணவக் கொலை என்ற எண்ணமே யாருக்கும் வரக்கூடாது என்ற நிலையை அந்த தண்டனை ஏற்படுத்த வேண்டும் என்றும் அனுசுயாவின் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
- மோகன் ராஜ்