மிஸ் சென்னை டூ நிபந்தனை ஜாமீன்... திடீர் அரசியல் விமர்சகர் அவதாரம்... யார் இந்த கஸ்தூரி?

இரண்டாவது, அரசியலில் செலவு செய்யும் அளவுக்கு என்னிடம் பணமுமில்லை. மூன்றாவது, அரசியல் கட்சியில் சேர்ந்தால் சுதந்திரமாகச் செயல்படவோ, கருத்து சொல்லவோ முடியாது'.
கஸ்தூரி
கஸ்தூரிமுகநூல்
Published on

“ட்விட்டரில் வரும் கெட்ட வார்த்தைகளேயே என்னால் தாங்க முடியவில்லை. நேரடி அரசியலில் அதைவிடவும் 9 மடங்கு அதிக தாக்குதல் இருக்கும். அதைச் சமாளிக்க எனக்கு சக்தி இல்லை. இரண்டாவது, அரசியலில் செலவு செய்யும் அளவுக்கு என்னிடம் பணமுமில்லை. மூன்றாவது, அரசியல் கட்சியில் சேர்ந்தால் சுதந்திரமாகச் செயல்படவோ, கருத்து சொல்லவோ முடியாது''

- நேரடி அரசியல் களத்தில் எப்போது இறங்குவீர்கள் என ஒரு தனியார் நாளிதழ் நேர்காணலில், கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படித்தான் பதிலளித்திருந்தார் நடிகை கஸ்தூரி. அரசியல் கட்சி எதிலும் உறுப்பினராக இல்லாவிட்டாலும், தனக்கென சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு, அரசியல் விமர்சகர் அவதாரம் எடுத்திருந்தார் நடிகை கஸ்தூரி.

கஸ்தூரி
கஸ்தூரி

அவரின் நிலைப்பாடுகளில் திமுக எதிர்ப்பு என்பதே பிரதானமாக இருந்தது. ஆனால், கடந்த மூன்றாம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில், திமுகவை விமர்சிப்பதாக நினைத்து, தெலுங்கு மக்கள் குறித்து அனைவரும் முகம் சுளிக்கும் அளவுக்கு அவதூறு கருத்துக்களை அள்ளி வீசினார். அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். தன் பதின்பருவத்தில் பல்வேறு கனவுகளோடு திரைத்துறையில் அடியெடுத்து வைத்த கஸ்தூரி, இன்று `எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்க பார்த்தியா?’ என்கிற இடத்தில் நின்று கொண்டிருக்கிறார். இந்தநிலையில், அவரின் இந்தப் பயணம் குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட கஸ்தூரி, தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிந்தைய தொன்னூறுகளில் தென்னிந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக வலம் வந்தார். சிறுவயதில் படிப்பில் படுசுட்டியாக இருந்தாலும், மாடலிங் துறையில் சாதிக்கவேண்டும் என்பதே அவரின் பெருவிருப்பமாக இருந்தது.

அதற்காக தன்னைத் தொடர்ந்து, தயார்படுத்தி வந்தவருக்கு, தன் 16 வயதில், படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் ஆத்தா உன் கோயிலிலே படத்தில்தான் முதன்முதலில் அறிமுகமானார் கஸ்தூரி. தொடர்ந்து, 1992-ல் நடந்த மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்டு பட்டம் சூடினார் நடிகை கஸ்தூரி.

கஸ்தூரி
கஸ்தூரி

திரைத்துறையிலும் சின்னவர், அமைதிப்படை, செந்தமிழ்பாட்டு, இந்தியன் என சத்யராஜ், பிரபு, கார்த்திக் என தமிழின் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து, குணச்சித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்துவந்தார். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ்ப்படம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். பின்னர் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

இது ஒருபுறமிருக்க, சமூக பிரச்னைகள் குறித்தும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது கருத்துத் தெரிவித்து வந்தார் கஸ்தூரி. நாம் தமிழர் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்பு, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வரவேற்பு என வலம் வர ஆரம்பித்தார் கஸ்தூரி.

கஸ்தூரி
கஸ்தூரி

2019 நாடாளுமன்றத் தேர்தலில், தென் சென்னை வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கருத்துத் தெரிவித்தார். 2021 தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மக்கள் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். இதுபோக மனுதர்மம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக கருத்துக்களைத் தெரிவித்து வந்தார் கஸ்தூரி. பாஜக சார்பில் நடைபெற்ற காக்கிச் சட்டைப் பேரணியில் கலந்துகொண்டார்.

கஸ்தூரி
மதுரை: மக்களை வெளியேற்ற இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம்!

அதிமுகவையும் அவ்வப்போது ஆதரித்து வந்த கஸ்தூரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்தார். அதுமட்டுமல்ல, விஜய் கட்சி ஆரம்பித்தபோதும் அவரை ஆதரித்துப் பேசினார். ஆரம்பம் முதலாகவே திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை மட்டும் தொடர்ந்துகொண்டே வந்தார். சமூக வலைதளங்கள் மூலமாக திமுகவை வம்பிழுத்துக்கொண்டே இருந்தார்.

இந்தநிலையில்தான், பிராமணர்களுக்கான பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த எட்டாம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலும் விவாதப்பொருளான நிலையில், நடிகை கஸ்தூரி தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்ற குரல் வலுத்தது. துவக்கத்தில் தனது கருத்தில் இருந்து பின்வாங்காமல் இருந்த கஸ்தூரி, ஒரு வழியாக வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கஸ்தூரி
கஸ்தூரிபுதிய தலைமுறை

இருப்பினும், சென்னை, மதுரை என தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. குறிப்பாக, அகில இந்திய தெலுகு சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் நந்தகோபால், கஸ்தூரிக்கு எதிராக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், கஸ்தூரிக்கு சம்மன் கொடுக்க முயன்றபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது.

கஸ்தூரி
“எடப்பாடி பழனிசாமியா அல்லது எரிச்சல் சாமியா?”- இபிஎஸ் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் மா.சு எதிர்வினை!

இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு நடிகை கஸ்தூரியை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில், கடந்த 16-ம் தேதி தெலங்கானா மாநிலத் தலைநகரமான ஐதராபாத்தின் கச்சிபௌலி என்கிற இடத்தில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டு 17 ம் தேதி சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட கஸ்தூரி, எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து, 29 ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில், நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கோரி இரு தினங்களுக்கு முன்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் பிரபாகரன் மனு தாக்கல் செய்தார்.

நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி

இந்த மனு நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கஸ்தூரிக்கு எழும்பூர் 14 ஆவது நீதிமன்ற நீதிபதி தயாளன் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10 மணி அளவில் எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையோடு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

கஸ்தூரி
நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்: “மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யவில்லை” - வழக்கறிஞர் பேட்டி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com