தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தவர் பொன்னி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த திருநங்கையான அவர், தன்னுடைய சிறுவயது முதல் படிப்பிலும் நடனத்திலும் ஆர்வமாக இருந்துவந்துள்ளார். சிறுவயதிலேயே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சிகளைப் பார்த்து பரதம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.
இதனால் 8ஆம் வகுப்பு படித்தபோதே, தன் வீட்டுக்கு அருகில் இருந்த நடனப்பள்ளிக்குச் சென்று அங்கு பரதம் கற்க அனுமதி கோரியுள்ளார். ஆனால், அப்பள்ளியின் நடன ஆசிரியர் முதலில் பொன்னிக்கு நடனம் சொல்லித் தர சம்மதிக்கவில்லை. தொடர்ந்து பொன்னிக்கு நடனத்தின் மீதிருந்த ஆர்வத்தை கண்ட அவர், இறுதியில்தான் நடனம் கற்றுத் தர சம்மதித்துள்ளார்.
அங்கு ஆரம்பமாகிய பொன்னியின் பரத நடனப் பயணம், அடுத்து சென்னையை நோக்கிப் பயணித்தது. அப்படி பரதத்தின் அடுத்த பயணத்தை தொடங்குவதற்காக, கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை வந்துள்ளார், பொன்னி. அதுவரை, ஊரில் பேண்ட் சட்டையுடன் வலம் வந்த பொன்னி, சென்னைக்கு வந்த நாள்முதல் சேலையை உடையாய்த் தேர்ந்தெடுத்துள்ளார்.
அதனால், சில மோசமான சம்பவங்களையும் சந்தித்ததாக நம்மிடையே குறிப்பிடுகிறார் பொன்னி.
அதில் முக்கியமாக தன்னுடைய படிப்புக்கு பொருளாதார பிரச்னை நிலவியதால், காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கி நிலைமையைச் சமாளித்துள்ளார்.
சிறுவயது முதலே இயல்பாகவே அவருக்கு கணிதம் நன்கு வரும் என்பதால், பி.எஸ்சி கணிதத்தைத் தேர்ந்தெடுத்து படித்துவந்துள்ளார். பி.எஸ்சி படித்துக் கொண்டிருந்த நேரத்தில் காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்த பொன்னி, எதிர்பாராவிதமாக கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் அறுவைசிகிச்சை செய்த காரணத்தால், அந்தநேரத்தில் அவர் மேற்படிப்பைத் தொடர முடியாமல் போயுள்ளது. என்றாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத பொன்னி, தொடர்ந்து தன்னுடைய பயணத்தில் தீவிரமாய் இருந்துள்ளார்.
அப்படியான சூழ்நிலையில்தான் சென்னை திருவான்மியூரில் குரு நாட்யாச்சார் சிவகுமார் என்பவர் அவருக்கு நடனப் பயிற்சி அளித்துள்ளார். தொடர்ந்து பொன்னி பொருளாதார ரீதியாகவும் முன்னேறும் வகையில் வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் அவர். அதன் பயனாக அவர் பரதத்திலும் எம்.ஏ. படிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
தற்போது சில பள்ளிகளில் பரத நாட்டிய ஆசிரியராக இருக்கும் பொன்னி, தாம் கற்ற கலையைப் பிறரும் கற்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், சென்னை கொடுங்கையூர் குப்பைமேடு அருகே வசிக்கும் இரண்டு ஏழைக் குழந்தைகளுக்கு அக்கலையை இலவசமாகக் கற்றுக்கொடுத்து வருகிறார்.
இக்கலையை கிராமந்தோறும் உள்ள குழந்தைகளுக்கு கற்றுத் தரும் நோக்கில் ஊர் ஊராகச் சென்றுவரும் பொன்னி, அக்கலையை ஆன்லைனிலும் சொல்லித்தந்து, வளரும் தலைமுறையினரையும் உருவாக்கி வருகிறார்.
இதுகுறித்து அவர் நம்மிடையே பேசுகையில், “கலை அனைவருக்கும் பொதுவானது; சமமானது. அதில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் இருக்கக்கூடாது. அந்த சமத்துவத்தை நோக்கியே நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்” என்கிறார், நம்பிக்கையுடன்.