சென்னையில் மழை நீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்த புதிய தலைமுறை ஊழியர் முத்துகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றிய முத்துக்கிருஷ்ணன் என்பவர் கடந்த சனிக்கிழமை காசி திரையரங்கம் அருகே உள்ள மழை நீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முத்துக்கிருஷ்ணனை அவர்களது நண்பர்கள் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அவரை நேரடியாக சந்தித்த மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், முத்துக்கிருஷ்ணனுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் கூறி இருந்தார்.
அதன் பெயரில் முத்துக்கிருஷ்ணனுக்கு சிறிய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துவிட்டது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இன்று (அக்.,24) காலை 10.20 மணிக்கு அவரது பிரேத பரிசோதனை தொடங்கி 10.50 க்கு நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து முத்துக்கிருஷ்ணனின் உடல் 11.20 மணியளவில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது இதனை தொடர்ந்து முத்துக்கிருஷ்ணனின் உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறை வளாகத்தில் இருந்து தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி மூலம் தென்காசி மாவட்டம் புளியங்குடிக்கு கொண்டு செல்லப்படுகிறது.