விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நேற்றைய தினம் நடைபெற்று முடிந்துள்ளது.
அதில் தலைமையேற்று பேசிய தவெக தலைவர் விஜய், “திராவிட மாடல் அரசியலை எதிர்க்கிறோம், மதவாத பிரிவினை அரசியலை எதிர்க்கிறோம், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரித்திலும் பங்கு” என பல அதிரடியான கருத்துகளை முன்வைத்தார். இதுகுறித்த தனது கருத்துக்களை பகிர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன்,
“விஜய்யின் கொள்கை, கோட்டுபாடுகள் குறித்து பேசுவதற்கு முன்பு அங்கு கூடிய கூட்டத்தை பற்றி நிச்சயமாக பேசவேண்டும். அக்கூட்டத்தை பார்த்தபின் இளைஞர்கள் அவரது (விஜய்) பின்னால் செல்ல மாட்டார்கள் என்பதை நாம் உறுதியாக கூறி விட முடியாது.
நேற்று கூடிய கூட்டம் என்பது காசு, உணவு என எதுவும் கொடுக்காமல் எதிர்ப்பார்க்காமல் தானாக சேர்ந்தக் கூட்டம். 18 -25 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறையினர்தான் தங்களின் சொந்த செலவில் அதில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் டாக்டர்களோ, இன்ஜினியர்களோ வரவில்லை; அன்றாட வாழ்க்கையின் பிரச்னைகளை சந்தித்து போராடும் மக்கள்தான் அதிகளவில் குழுமி இருந்தார்கள். யாரேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த மாட்டார்களா? என்று கண்ணோக்கும் கூட்டம் அது.
நேற்றைய தினம் 2 - 2.5 லட்சம் பேர் நிச்சயம் அங்கு கூடியிருப்பார்கள். விஜய் அதிமுகவின் அரசிலை பேசுகிறரா, பாஜக, திமுகவை எதிர்க்கிறாரா என்பதையெல்லாம் ஒரு ஓரமாக வைத்து விட்டு, இப்போது இருக்கக்கூடிய இளைய தலைமுறை ஒரு மாற்றத்தை எதிர்ப்பாக்கிறார்கள் என்பதை அந்த கூட்டம் தெளிவாக விளக்குகிறது.
விஜய்யின் பேச்சை decoding செய்தால் அவர் கையில் எடுத்திருப்பது அதிமுகவின் அரசியலைத்தான்.. யாரையும் எதிர்க்கமாட்டோம் யாரையும் அடிக்கமாட்டோம் என்றுதான் விஜய் கூறுகிறார். இதுதான் எம்.ஜி.ஆரின் அரசியலாகவும் இருந்தது. இதுபோலதான் 13 வருடங்கள் எம்.ஜி.ஆரின் ஆட்சியும் இருந்தது.
3 விஷயங்களைதான் விஜய் அடிக்கோடிட்டு பேசியிருக்கிறார்..
அதன்படி, கூட்டணி ஆட்சிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்து இருக்கிறார். அதாவது, காங்கிரஸ், விசிக, பெரும் அளவில் விஜய் எதிர்ப்பார்ப்பது அதிமுக. மேலும், விழுப்புரத்தில் தனது முதல் மாநாட்டை அவர் தேர்ந்தெடுத்திருப்பது என்பது என்னை பொறுத்தவரை வட தமிழகத்தில் திமுக கூட்டணி என்பது மிக வலுவாக இருக்கிறது. அதற்கு மிகப்பெரிய காரணம் விசிக. விசிகவின் பெருவாரியான ஓட்டுகள் இப்போது பிரிய வாய்ப்புள்ளது.
ஏனெனில், விசிகவிற்கு வாக்களித்தவர்கள் கூறும்போது, ‘அவர் (திருமாவளவன்) கூட்டணியிலேயே இருக்கிறார்.. எங்களுக்கு ஒரு அடையாளம் கிடைக்காதா.. அப்போது விஜய்க்கு நாங்கள் எங்களது வாக்கினை செலுத்துவதன் மூலம் எங்களுக்கான அடையாளம் கிடைக்கும்’ என்கின்றனர். இதேபோல பாமக-விற்கு வாக்களித்தவர்கள், பாமகவின் அரசியல் நீர்த்து போய்விட்டதாகதான் கருதுகிறார்கள். இவை அனைத்தும் களத்திலிருந்து நான் எடுத்த தரவுகள்.
11 ஆம் வகுப்பு படிக்கும் இளைஞர் ஒருவர் கன்னியாக்குமரியிலிருந்து வருகை தந்திருக்கிறார். ‘உனக்கு ஓட்டே கிடையாது’ என்று நான் கேட்டபோது அந்த இளைஞர் என்னிடம், ‘2026-ல் எனக்கு முதல் ஓட்டு உள்ளது.. எனது முதல் ஓட்டு விஜய்க்குத்தான்’ என்று தெரிவித்தார். எனவே, அரசியலிருந்து ஒதுங்கிபோகிற இளைஞர்கள் அங்கு வரவில்லை.. மாற்றத்தை எதிர்ப்பார்க்கும் இளைஞர்கள்தான் அங்கு வந்தார்கள்.
இரண்டாவது, தளபதி தளபதி என்று யாரும் அங்கு கூச்சலிடவில்லை. விஜய் அண்ணா விஜய் அண்ணா என்றுதான் கூச்சலிட்டு, உணர்வுகளை பரிமாறிக்கொண்டார்கள்.
விஜய் திரைத்துரையுல் உச்சியில் இருக்கும் இந்த காலத்தில்தான் அரசியலுக்குள் நுழைகிறார். விஜயகாந்த், கமல்ஹாசனை போல திரையுலகிலிருந்து விலகும் சமயத்தில் அவர் அரசியலில் நுழையவில்லை .எனவே, அவர்களோடு விஜய்யை இணைத்து பேசவே முடியாது.
திமுகவிற்கு எதிராக யாரும் தற்போது இல்லை. எனவே, உதயநிதி vs விஜய் என்றுதான் தற்போது களமானது அமையப்போகிறது" என்றார். அவர் பேசியவற்றின் காணொளி தொகுப்பை, கீழுள்ள இணைப்பில் காணலாம்...