பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலையிடம் விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் பேசினார். இந்நிலைியல், இதற்கு பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் விடுத்துள்ள அறிக்கையில், "ஆணவப் போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. நயத்தகு நாகரிக அரசியலை அண்ணாமலை கற்றுக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதை அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று சென்னை பத்திரிகையாளர் யூனியன் வலியுறுத்தியுள்ளது. அதேபோல, பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மேலும், "பிரதமரின் சென்னை பயணத்தின்போது பெண் பத்திரிகையாளரிடம் மோசமாக நடந்து கொண்ட பாஜக நிர்வாகி குறித்து அண்ணாமலையிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" எனவும் அது குற்றம்சாட்டியுள்ளது.