அதிகாலை 3 மணிக்கு கொடுங்கையூரில் காவல்துறையினரின் வாகன தணிக்கை நடந்தது. 3.15 மணிக்கு ரவுடி காக்காதோப்பு பாலாஜி காரில் வந்த நிலையில், காவல்துறையின் வாகன தணிக்கையை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
அதிகாலை 4.20 மணிக்கு வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் எதிரே உள்ள BSNL-லின் பாழடைந்த குடியிருப்பு வளாகத்தில் காக்கா தோப்பு பாலாஜி பதுங்கி இருப்பது காவல் துறைக்கு தெரிந்தது. அடுத்த 10 நிமிடத்தில் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல் துறையினர் ரவுடி பாலாஜியை பிடிக்க முயன்றனர்.
அதிகாலை 4.49 மணியளவில் காவல் துறையினரை பாலாஜி கள்ளத்துப்பாக்கியால் சுட்டதாகவும், இதனால் தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சரவணன் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதில் காக்கா தோப்பு பாலாஜியின் நெஞ்சில் குண்டு பாய்ந்ததை அடுத்து அவர் சரிந்து விழுந்துள்ளார்.
அதிகாலை 5 மணியளவில் மயங்கி கிடந்த பாலாஜியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றனர். 5.45 மணிக்கு மருத்துவமனையை அடைந்த நிலையில், ரவுடி பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து 6.30 மணிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் காக்கா தோப்பு பாலாஜி என தெரியாமலேயே காவல்துறையினர், என்கவுண்டர் செய்ததாக சென்னை வடக்கு இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை வடக்கு இணை ஆணையர் பிரவேஷ் குமார், “காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கியால் சுட்டதாலேயே, காவல் துறையினர் திருப்பி சுட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் இந்த என்கவுண்டருக்கும் தொடர்பில்லை” எனக்கூறினார். காக்கா தோப்பு பாலாஜியோடு காரில் வந்த நபரை காவல் துறையினர் பிடித்துள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் எனவும், பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.