காஞ்சி மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திரரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
காஞ்சி சங்கரமடத்தின் 69-ஆவது பீடாதிபதி ஜெயேந்திரர், மூச்சுத் திணறல் காரணமாக நேற்று காலமானார். இதனையடுத்து சங்கரமடத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயேந்திரரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், ஆன்மீகவாதிகள், அவரின் ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா, நித்யானந்தா உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பல்வேறு தரப்பினரின் அஞ்சலியைத் தொடர்ந்து இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. வழிபாடுகள் முடிவடைந்து அடக்கம் செய்வதற்காக சங்கரமடத்தின் பிருந்தாவனத்திற்கு ஜெயேந்திரரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
சந்திரசேகரர் பிருந்தாவனத்தின் பின்புறம் ஜெயேந்திரருக்கு ஏழு அடி சதுர பரப்பில், ஏழு அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. இறுதியாக காஞ்சி சங்கரமடத்தின் சம்பிரதாயப்படி, பெரிய மூங்கில் கூடையில், சந்தன நாற்காலியில் அமரவைக்கப்பட்ட நிலையில் ஜெயேந்திரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயேந்திரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட வேளையில் வேதமந்திரங்கள் ஒலிக்கப்பட்டன.