நீலகிரி: படுகர் சமுதாயத்தின் முதல் பெண் விமானி ஜெயஸ்ரீ-க்கு குவியும் பாராட்டுகள்

நீலகிரியில் படுகர் சமுதாயத்தில் இருந்து முதல் பெண் விமானியாக தேர்வாகியுள்ள, கோத்தகிரியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ-க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Jayashree
JayashreePT Desk
Published on

நீலகிரி மண்ணின் மைந்தர்களான படுகர் இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கடைபிடித்து வாழ்ந்து வருகின்றனர். படுகர் இன மக்கள் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக இந்த சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் காலூன்றி வருகின்றனர்.

Jayashree
JayashreePT Desk

இந்நிலையில், நீலகிரியில் படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் முதல் முறையாக விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள நெடுகுளா குருக்கத்தி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான மணி – மீரா தம்பதியர். இவர்களுடைய மகள் ஜெயஸ்ரீ என்பவர்தான் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்வாகியுள்ளார்.

ஜெயஸ்ரீ, கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த நிலையில், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ளார். இதையடுத்து சில காலம் ஐடி துறையில் வேலை பார்த்து வந்த இவர், விமானியாக ஆக வேண்டும் என்று முடிவு செய்து தென்னாப்பிரிக்காவில் விமான பயிற்சி எடுத்துக் கொண்டார். இதையடுத்து பைலட் பயிற்சி முடித்து தற்போது விமானியாக சேர்ந்துள்ளார். படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், இது போன்ற துறையில் நுழைந்திருப்பது படுகர் சமுதாயத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு தூண்டுகோலாக அமைந்துள்ளது.

Jayashree
Jayashreept desk

இதுகுறித்து ஜெயஸ்ரீ புதிய தலைமுறையிடம் கூறியதாவது... தற்போதைய காலகட்டத்திலும் எங்களது சமுதாயத்தில் அண்டை மாவட்டம், மாநிலங்களுக்கே படிக்க அனுப்ப தயங்குகிறார்கள், அப்படிப்பட்ட சூழ்நிலையில் மற்றொரு நாட்டுக்கு அதுவும் விமான பயிற்சி பெற தைரியமாக எனது பெற்றோர் என்னை அனுப்பி வைத்தனர். அதேபோல் பெண் குழந்தைக்கு இவ்வளவு செலவு தேவையா என்று பலர் கேள்வி கேட்டபோது பெண் குழந்தைக்கு தான் இவ்வளவு செலவு தேவை என்று என் பெற்றோர்கள் கூறினார்கள்.

பொதுவாக விமானி என்றால் ஊர் சுற்றும் வேலை என்று அனைவரும் நினைப்பார்கள். ஆனால், வழக்கமான வேலைகளை விட விமானி வேலையில் சவால்கள் அதிகம் உள்ளது. மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை, மனநிலை பரிசோதனைகள் நடைபெறும். அதில் தேர்வு பெறவில்லை என்றால் பணியை இழக்க நேரிடும். எனவே உடல்நிலை மற்றும் மனநிலை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். மன தைரியம் அதிகளவில் இருக்க வேண்டும்.

இப்படியாக ஒரு வேலைக்கு நான் வர காரணம் எனது ஆரம்பகால பள்ளி படிப்பும், சிறுவயது கனவும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் முக்கிய காரணம். எங்கள் சமுதாயம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் விமானியாக உருவாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" எனக் கூறினார்.

சாதித்துக் காட்டிய ஜெயஸ்ரீக்கு பாராட்டுகள் குவந்த வண்ணம் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com