“ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்” - வித்யாசாகர் ராவ் கடித தகவல்

“ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்” - வித்யாசாகர் ராவ் கடித தகவல்

“ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்” - வித்யாசாகர் ராவ் கடித தகவல்
Published on

அப்போலோ மருத்துவமனையில் சென்று பார்த்தபோது ஜெயலலிதா உணர்வற்ற நிலையில் இருந்தார் என தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் 2016ஆம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிய கடிதத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எத்தனை மருத்துவக் குறிப்புகள் ஆளுநர் மாளிகைக்கு வந்தன? மருத்துவமனையில் ஆளுநர் முதல்வரை பார்த்துவிட்டு சென்ற பிறகு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தகவல் அனுப்பப்பட்டதா? என்பன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. 

இதற்கு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வித்யாசாகர் ராவ், 2016ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் டிசம்பர் 7ஆம் தேதி எழுதிய இரண்டு கடிதங்களை ஆணையத்திடம் ஆளுநர் மாளிகை வழங்கியுள்ளது. இதில் அக்டோபர் 6ஆம் தேதி எழுதிய கடிதம் தற்போது கிடைத்துள்ளது. அதில் அக்டோபர் 1ஆம் தேதி ஜெயலலிதாவை மருத்துவமனையில் அவரது வார்டுக்கு சென்று பார்த்த போது மயக்க நிலையில் இருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை தலைவர் மற்றும் மருத்துவர்களிடம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்ததாக வித்யாசாகர் ராவ் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ஜெயலலிதா உடல்நிலை குறித்து மருத்துவமனை தொடர்ச்சியாக அறிக்கை வெளியிடுவதை உறுதி செய்யவும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும் தலைமைச் செயலாளரிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா நலம் பெற்று வர, தான் கடிதம் எழுதியதையும், அதற்கு அவர் பதில் அனுப்பியதையும் சுட்டிக்காட்டியுள்ள வித்யாசாகர் ராவ், காவிரி தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் ஜெயலலிதாவின் அறிக்கை வாசிக்கப்பட்டது, இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதா வெளியிட்டது, ஜெயலலிதா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகள் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் உள்ளிட்டவற்றை எல்லாம், குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com