ஜெயலலிதா நினைவு மண்டபத்தில், சசிகலா மீண்டும் சபதம் எடுத்து விடுவார் என்ற அச்சத்திலேயே நினைவு மண்டபம் மூடப்பட்டுள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' நிகழ்ச்சியின் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையை உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். பரப்புரையில் அவர் பேசும்போது, “ எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியின் அடிமை. இது அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மையை வெளிகொண்டு வந்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார்.
அதிமுக அமைச்சர்கள் அத்தனை பேர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதை மக்கள் அனைவரும் அறிவார்கள். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து உறுதி அளித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை. அடுத்தவர் காலில் விழுந்து முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அனிதா என்ற பெயரை மாணவர்கள் மறந்து விடக்கூடாது. கருணாநிதி ஆட்சிக் காலத்தில், நுழைவு தேர்வு முறையை ரத்து செய்தார். ஜெயலலிதா இருந்தபோது கூட நீட் தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. ஆனால் தற்போது நடந்து வரும் அடிமை அதிமுக அரசு, மாநிலத்திற்கான கல்வி உரிமைகளை பறிகொடுத்து வருகிறது.
இதுவரை நீட் தேர்வால் 14 மாணவர்களை நாம் இழந்துளோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை கண்டிப்பாக ஸ்டாலின் ரத்து செய்வார். சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கு சென்று விடுவார், மீண்டும் சபதம் எடுத்து விடுவார், என்ற அச்சத்திலேயே திறக்கப்பட்ட ஜெயலலிதா நினைவு மண்டபம் மூடப்பட்டுள்ளது" என்றார்.