ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை டிடிவி தினகரனிடம் காப்பி எடுத்து கொடுத்தது விவேக் என கிருஷ்ணப்ரியா தெரிவித்துள்ளார்.
அப்போலோ மருத்துவமனையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுத்த வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். இந்த வீடியோ ஆர்.கே.நகர் தேர்தலை மையப்படுத்தி அரசியல லாபத்திற்காக வெளியிடப்பட்டுள்ளது ஒரு தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த வெற்றிவேல் ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்துக்கள் பரப்படுவதாகவும் அதனால்தான் இந்த வீடியோவை வெளியிட்டதாக அவர் கூறினார். இது ஒருபுறம் இருக்க சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா, வீடியோ வெளியிட்டது வெற்றிவேலின் கிழ்த்தரமான செயல் என கடந்த 20 ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து அன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணப்ரியா, வீடியோவை எடுத்தது சசிகலா. எடுக்கச் சொன்னது ஜெயலலிதா. ஜெயலலிதா சொன்னதால்தான் சசிகலா வீடியோவை எடுத்தார். தனக்கு பின்னே என்ன இருக்கிறது என்பதை காண வேண்டும் என ஜெயலலிதா நினைத்ததால் வீடியோ எடுக்கப்பட்டது. டிடிவி தினகரனிடம் கொடுக்கப்பட்ட வீடியோ வெற்றிவேலிடம் சென்றது எப்படி? ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை தேர்தல் ஆணையத்திடம் தருவதற்காக சசிகலாதான் எங்களிடம் வழங்கினார். ஆனால் வீடியோவை வெளியிட்டு வெற்றிவேல் துரோகம் செய்துள்ளார் எனக் அவர் கூறினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறிய நேரத்தில் சசிகலாவை சிறையில் சந்தித்தோம். ஓபிஎஸ் விசாரணை கமிஷன் கேட்டதால் வீடியோ தேவைப்பட்டாலும் படலாம் என சசிகலா கூறினார். ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஒரு காப்பி எடுத்து தினகரனிடம் கொடுத்து வைக்க சசிகலா கூறினார். ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை டிடிவி தினகரனிடம் காப்பி எடுத்து கொடுத்தது விவேக்தான் என கிருஷ்ணப்ரியா கூறினார்.