ரூ.5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு வருகிற மார்ச் 11- ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் தனது சகோதரரும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மருமகனுமான நரேஷ் கடந்த 2016 ஆம் ஆண்டு தங்கள் இருவருக்கும் பங்குள்ள ASHWIN FISHINGNET என்ற நிறுவனத்தை, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தூண்டுதலின்பேரில் அவரது அடியாட்களைக் கொண்டே நவீன், முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மகள் ஜெயபிரியா ஆகியோர் தனது 5 கோடி மதிப்புடைய தொழிற்சாலையையும் மற்றுமொரு திருமண மண்டபத்தையும் அபகரித்ததாகக் மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மகேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 24 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அவரின் மகள் ஜெயபிரியா மற்றும் மருமகன் நவீன் ஆகியோர் மீது கூட்டு சதி, அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கி கொள்ளையில் ஈடுபடுதல், வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்துதல், குற்றச்செயல் புரிய தூண்டுதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை இந்த வழக்கில் கடந்த 25 ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜெயகுமாரின் மகள் ஜெயபிரியா மற்றும் மருமகன் நவீன் குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே தி.மு.க பிரமுகரை தாக்கி அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயகுமாரை இந்த வழக்கில் கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆலந்தூர் ஜெ.எம் 1 குற்றவியல் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து மாஜிஸ்திரேட் வைஷ்ணவி முன் ஆஜர்படுத்தினர்.
வழக்கு விசாரணையின்போது குடும்பச் சொத்துத் தகராறில் தன்னை இணைத்தது சரியல்ல எனவும், அண்ணன் தம்பிக்குள்ளான சிவில் வழக்கை எப்படி நில மோசடி அபகரிப்பு வழக்காக மாற்ற முடியும் என ஜெயகுமார் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க வழங்கப்படும் 41 (a) நோட்டீஸ் ஜெயகுமாருக்கு வழங்கப்படவில்லை எனவும், 2016 ஆம் ஆண்டு வழக்கில் மத்திய குற்றப்பிரிவு கடந்த 24 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருப்பது அரசியல் ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கை எனவும் வாதிடப்பட்டது.
இதில் கொள்ளை வழக்கு பதிவு செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜெயகுமார் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் போலீசார் பதிந்துள்ள வழக்குகளில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் நேரடி தொடர்பு எங்கும் இல்லை எனவும், கோவிட் சூழ்நிலை காரணமாகவே நவீன் போலீசார் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனவும் ஜெயகுமார் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கிடையில், கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பதவிகளை வகித்து வந்த தன் மீது எந்த வழக்குகளும் கிடையாது என ஜெயகுமார் மாஜிஸ்திரேட் முன்னிலையில் தெரிவித்ததுடன்,"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை." (பொருள்: குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.) என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டி நடுவர் முன் பேசினார்.
பின்னர் இந்த வழக்கானது சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை வருகிற மார்ச் 11-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஆலந்தூர் ஜே.எம் 1 குற்றவியல் நீதிமன்ற நடுவர் வைஷ்ணவி உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை ஆஜர்படுத்துவதையொட்டி ஆலந்தூர் நீதிமன்றம் முன் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பரபரப்பான சூழல் காணப்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த 100-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
"தி.மு.க அரசு அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாகவே, அடிப்படை ஆதாரம் இல்லாத வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை இணைத்துள்ளது. முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு ஒரு குடும்பப் பிரச்சனைக்குள் மூக்கை நுழைத்து அரசியல் செய்ய என்ன அவசியம் உள்ளது. சட்டப் போராட்டம் நடத்தி போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடைப்போம்" என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜெயகுமாரின் மகனுமான ஜெயவர்தன் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்து நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட வாதங்களை தெரிவித்தார்.
முன்னதாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தினுள சேரில் உட்கார வைக்கப்பட்டதற்கு வழக்கறிஞர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு மாஜிஸ்திரேட் வைஷ்ணவி மூத்த குடிமகன் என்ற அடிப்படையிலும் புகார் மட்டுமே அவர் மீது சுமத்தப்பட்டு இருப்பதால் அவரை உட்கார வைத்ததாக நீதிபதி விளக்கமளித்தார். மேலும் தன்னுடைய நீதி அறையில் குற்றம் சாட்டப்பட்டு, குற்றம் உறுதி ஆகாத வரையில் அனைவரையுமே உட்கார வைத்துதான் விசாரணை நடத்துவதாக மாஜிஸ்திரேட் வைஷ்ணவி தெரிவித்தார்.
போடாதே போடாதே பொய்வழக்கு போடாதே என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பின்பு நீதிமன்ற வாசலில் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.