சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சிக்காலத்தில் செய்த சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, புதிய உறுப்பினர்களை சேர்த்தல், உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்தல், அதன்மூலம் 2 கோடி தொண்டர்களை இணைக்கும் பணிகளை மாவட்ட செயலாளர்கள் துரிதப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது.
மேலும் மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக நடத்துவது தொடர்பாகவும் பேசப்பட்டது. இந்த ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். தமிழகத்தில் பாலாறு, தேனாறு ஓடுகிறது என இந்த அரசு கூறி வந்த நிலையில், சாராய ஆறு மட்டுமே ஓடுகிறது என தெரிய வந்துள்ளது.
சட்டப்பேரவையில் இந்த ஆண்டு வழங்கப்பட்ட கொள்கை குறிப்பு உரையில் கள்ளச்சாராயம் மற்றும் போதை ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எந்த ஒரு விவரமும் வழங்கப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கும் பதில் இல்லை. தற்போது 800 நபர்களை கைது செய்துள்ளோம் என டிஜிபி கூறும் நிலையில், அப்போது சட்டப்பேரவையில் உண்மையை கூறாமல் மறைத்தது ஏன்?
கள்ளச்சாராயம் விவகாரத்தில் ஆளுநரின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை. அதிமுக ஆட்சியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாகவே கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டது. தற்போது உள்ள முதல்வர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கமாட்டார். அடுத்த 15 நாட்களில் கள்ளச்சாராய விற்பனைகள் தொடரும். அதனை தடுக்க இவரிடம் திறன் இல்லை.
இந்தியாவில் தற்போது வரை இல்லாத அளவிற்கு U -TURN மற்றும் அந்தர்பல்ட்டி அடிக்கும் ஒரு அரசாக இந்த அரசு உள்ளது” என்றும், பின் மேலும் மிகக்கடுமையாகவும் விமர்சனம் செய்தார்.