மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்த விவசாயி ஜெயதேவன் 17 ஆண்டுகளாக காத்திருந்தும் பலன் கிடைக்காததால் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அவர் போராட்டத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேட்டூர் அனல்மின் நிலைய விரிவாக்கத்துக்காக கடந்த 2004ஆம் ஆண்டு ரெட்டியூர் பகுதியை சேர்ந்த ஜெய தேவனுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 10 சென்ட் நிலம் மற்றும் ஆழ்துளைக்கிணறு மின் வசதியுடன் அவர் வசித்து வந்த வீடு உள்ளிட்ட இடங்களை ரூ.1,50,000 பணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்குவதாக கூறி அனல் மின் நிலைய நிர்வாகம் வாங்கியது. அவர்கள் கூறியதையடுத்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அனல்மின் நிலைய நிர்வாகத்திற்கு அவர் தன் நிலத்தை ஒப்படைத்திருந்தார். ஆனால் பணம் மட்டுமே வழங்கப்பட்டதே தவிர அவரது மனைவிக்கு வேலை கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் போதிய படிப்பில்லை என்று கூறி பணி வழங்கப்படாமல் இருந்தது. பணி மறுப்பினை தொடர்ந்து, மனமுடைந்த அவரது மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் தற்போது தனது மகனுக்காவது அரசு பணி வழங்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகம் முதல் குடியரசுத் தலைவர் வரை பலருக்கும் விண்ணப்பித்துள்ளார் ஜெயதேவன். மாவட்ட நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை வழக்கு தொடுக்கப்பட்டு, அவ்வழக்குகள் அனைத்திலும் நீதிபதிகள் ‘உடனடியாக இவரது குடும்பத்திற்கு அரசு பணி வழங்க வேண்டும்’ என்று பலமுறை உத்தரவிட்டும் உள்ளது. ஆனால் அனல் மின் நிலைய நிர்வாகம் பணி வழங்காமல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தன்னை மட்டும் வஞ்சிப்பதின் நோக்கம் தெரியவில்லை என்றுகூறி மனமுடைந்த ஜெயதேவன் இன்று மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது அவரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
அதன்பிறகு அனல் மின்நிலைய நிர்வாகத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்ததையடுத்து ஜெயதேவனிடம் அனல் மின் நிலைய அதிகாரிகள் நுழைவாயிலின் வெளியிலேயே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்பொழுது அனல்மின் நிலைய அதிகாரிகள் ஜெயதேவனுடைய மனு சென்னை தலைமை மின்வாரிய அலுவலகத்தில் பரிசீலனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணி ஆணை வழங்கப்பட்டுவிடும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து ஜெயதேவன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
தனக்கு சொந்தமான தற்போதைய சந்தை மதிப்பு ரூபாய் 10 கோடி மதிப்பிலான நிலத்தை மின்வாரியத்திற்கு சொற்ப விலைக்கு வழங்கிவிட்டு அரசு பணிக்காக 17 ஆண்டு காலம் தனி மனிதனாக போராடிய அவருக்கு அரசு மற்றும் மின்வாரிய அதிகாரிகள் கருணை காட்ட வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.