தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் சிறைவாசிகள் செல்போன் பயன்படுத்துவதைத் தடுக்க 12 ஜாமர் கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கரூரில் உள்ள கிளைச் சிறையில் இன்று ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் சிறையில், சிறைவாசிகள் தடை செய்யப்பட்ட பொருள்களை பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
"தமிழகத்தில் சிறைவாசிகளுக்கு படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திருச்சி மத்திய சிறையில் ஒரு ஐடிஐ நடைபெற்று வருகிறது. இதில் 6 பயிற்சி பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. 138 சிறைவாசிகள் படித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 15 ஆயிரம் சிறைவாசிகள் உள்ளனர். இதில் 6 ஆயிரம் பேர் எட்டாம் வகுப்பு முதல் பல்கலைக் கழகம் வரை படித்து வருகின்றனர். சிறைவாசிகள் செல்போன் பேசுவதைத் தடுக்க 12 ஜாமர் கருவிகள் மத்திய சிறைகளில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை புழல் சிறையில் ஜாமர் கருவி நிறுவப்பட்டுள்ளது. அனைத்து மத்திய சிறைகளிலும் ஜாமர் கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என ஏடிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.