தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. முறையான மருத்துவப் சோதனைக்குப் பின் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை இளைஞர்கள் அடக்கினர்.
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் நடைபெற்றது. அதன் எதிரொலியாக ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் சட்டப்பேரவையில் சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சிவிரட்டு, எருதுவிடும் விழா உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பலத்த பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. சுமார் 500 காளைகளும் 350 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் 15 பேர் காயமடைந்தனர். இதேபோல், மதுரை மாவட்டம் மேலூர் அருகே தாமரைப்பட்டி பகுதியில் காளைகளை அவிழ்த்துவிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேது நாராயணபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. சிவகங்கை சிராவயலில் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது.