ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி நடைபெற்ற தொடர் போராட்டத்தால் தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. அதன்படி ஒரு சில மாவட்டங்களில் இன்று ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயங்கள் நடைபெற்று வருகின்றன.
புதுக்கோட்டையில் தமிழக அரசின் சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ராப்பூசல் கிராமத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். 40க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. துள்ளிவந்த காளைகளை அடக்க, மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டினர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத மாடுகளுக்கு, அவற்றின் உரிமையாளர்களுக்கு பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டன. வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைக் காண ராப்பூசல் கிராமத்தில் ஏரளமானோர் குவிந்திருந்தனர்.
இதேபோல் கோவை கொடீசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. ரேக்ளா பந்தயத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடக்கி வைத்தார். இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது.தமிழ்நாடு ரேக்ளா கிளப்புடன் இணைந்து போட்டி நடத்தப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநகர காவல்துறை ஆணையர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது. 5 உதவி ஆணையர்கள், 625 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருச்சி மணப்பாறை அருகே கடந்த 6 நாட்களாக தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று தடைகள் ஏதும் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடந்தது.