ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதால், அலங்காநல்லூரிலும், மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலும் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று முதலமைச்சர் தெரித்திருந்த நிலையிலும், ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுவது சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய அரசு தயாராக இருந்தாலும், அலங்காநல்லூரில் போராட்டக்காரர்கள் ஜல்லிக்கட்டு நடத்த மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வரும் களத்தில், ஜல்லிக்கட்டு நடக்கும் எனவும், அதனை இன்று காலை 10 மணிக்கு தானே நேரில் வந்து துவக்கி வைக்க இருப்பதாகவும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஆனால் போராட்டகாரர்கள் தங்களுக்கு ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் வேண்டாம் நிரந்தர தீர்வு வேண்டும் என போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, காவல் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. மேலும் அலங்காநல்லூர் வரும் அனைத்து வழியையும் போராட்டக்காரர்கள் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தி அடைத்து வைத்துள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது கேள்விக்குறியாகவே உள்ளது.