தமிழர்களின் பாரம்பரியமாம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி கோரி சமூகவலைத்தளங்கள் மூலம் ஒன்று கூடிய இளைஞர்கள் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னை மெரினாவில் இதற்காக விதைக்கப்பட்ட விதை இன்று வீரியத்துடன் தமிழகம் முழுவதும் விரிந்துள்ளது.
இந்த ஆண்டாவது பொங்கல் பண்டிகையுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 8ம் தேதி ஒன்றுகூடிய இளைஞர்களின் குரல் உலகம் முழுவதும் எதிரொலித்தது. எந்த விதமான கட்சிப் பின்னணியும் இல்லாமல் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் மட்டுமே ஒருங்கிணைந்த இளைஞர்கள் அமைதியான முறையில் தமிழகம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தனர். சென்னையை அடுத்து மதுரை, கோவை என அடுத்த நகரங்களிலும் மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடத் தொடங்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் நேற்று காலை சுமார் 9 மணியளவில் கூடிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வாடிவாசலில் காளைகளைத் திறந்துவிடும் வரை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து அறவழியில் போராடத் தொடங்கினர். குடிநீர், உணவு என பல நடைமுறைச் சிக்கல்களைச் சந்தித்தாலும் அவர்களின் போராட்டம் இன்று காலை 6 மணிக்கு மேலும் 21 மணிநேரமாக நீடித்தது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டைக் காப்பதற்கான போராட்டக்களத்தில் பெண்கள் உள்பட இளைய தலைமுறையினர் திரளாகத் திரண்டனர். போராட்டக்களத்திலேயே சமைத்து உண்டு போராட்டத்தினை முன்னெடுத்த அவர்களை இன்று காலையில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தது. கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி சாலை மறியல் நடந்தது. அலங்காநல்லூர் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையிலும் மற்றும் சில பகுதிகளிலும் போராட்டம் நடக்கிறது.
மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக சென்ற அரசியல் கட்சியினரை அனுமதிக்க மறுத்தனர் இளைஞர்கள். அரசியல் கட்சியினர் யாரும் போராட்டக் களத்துக்கு வர வேண்டாம் என்று முழக்கமிட்டனர். தமிழீழப் போராட்டத்துக்குப் பின்னர் எந்தவித கட்சிப் பின்னணியும் இல்லாமல் இளைஞர்கள் மத்தியில் தன்னெழுச்சியாக எழுந்த இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.