புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இவ்வாண்டின் முதல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
மத்திய அரசின் சட்டத்தால் தமிழகத்தில் கடந்தாண்டு மாட்டுப் பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அதன்பின்னர் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீரந்தரமாக நீக்கும் வகையில், புதிய சட்டமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை, அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில், 450 காளைகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்கினர். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஜல்லிக்கட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கண்டு களித்தனர். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.