சக மனிதர்களின் இறப்பை கூட சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய இன்றைய நாகரீக நடைமுறை வாழ்வில் ஓரு காளையின் மரணத்தையொட்டி ஒரு கிராமமே கூடி அழுது கோடித்துணிபோர்த்தி மனிதர்களுக்கு செய்வது போல் இறுதி சடங்கு செய்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.
தமிழகத்திலே அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் ஒரே மாவட்டம் புதுக்கோட்டை. இம்மாவட்டத்தை பொருத்தவரை பெரும்பாலான கிராமங்களில் ஜல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு போட்டிகள் இல்லாமல் கோயில் திருவிழாக்கள் நடைபெறாது. தங்கள் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்து போன இப்போட்டிகளுக்காகவே ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டில் ஒருவராக காளைகள் வளர்ப்பதை தொன்று தொட்டு செய்து வருகின்றனர் இம்மாவட்ட மக்கள். குறிப்பாக அன்னவாசல்,விராலிமலை,பொன்னமராவதி,திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுதோறும் காளைகளை காணலாம். அவ்வாறு ஒரு வீட்டில் 20 ஆண்டுகாலமாக வளர்க்கப்பட்ட ஒரு காளையின் இறப்புத்தான் ஒரு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்த பழனியான்டி என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக மறைக்காளை என்ற காளையை வளர்த்துவந்தார். வீட்டிலே பிறந்த கன்று என்பதால் அந்த காளையும் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாகி போனது. புதுக்கோட்டை மட்டுமின்றி மதுரை,சிவகங்கை,தேனி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டிகளிலும் களம் கண்ட இந்த காளை பலநூறு பரிசுகளை பெற்று பெயர் பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் சத்தியமங்கலம் மறைக்காளை வாடிவாசலில் இருந்து கட்டவிழ்க்கப்படும் போது வீரர்களே சற்று தடுமாறித்தான் போவார்கள். ஏன் என்றால் களத்தில் நின்று விளையாடி தனக்கென தனிப்புகழை சேர்த்துக்கொண்டது அந்த காளை.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மறைக்காளைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து. பதறிப்போன பழனியான்டி குடும்பத்தினர் நாமக்கல் மற்றும் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சையளித்து காளையை காக்க போராடினர்.ஆனால் இறுதிவரை முயன்றும் முடியாமல் போகவே நேற்று இரவு மறைக்காளை உயிர்பிரிந்தது. இதனைக்கண்டு பழனியான்டியின் குடும்பம் கதறி அழுத சத்தம் கேட்டு அக்கிராமமே திரண்டு சோகத்தில் ஆழ்ந்தது. இதனையடுத்து இன்று அக்கிராமத்தினர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமக்களும் பழனியான்டியின் வீட்டிற்கு வந்து மனிதர்களுக்கு இறுதி சடங்கு செய்தனர்.
காளைக்கு செய்யப்பட்ட இறுதிச்சடங்கு சாதாரணமாக இல்லாமல் பறையடித்து , மாலை மரியாதை செய்து, கோடித்துணி போர்த்தி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும் மதுரை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு இறப்பு சேதி சொல்லப்பட்டு அவர்களும் வந்து மறைக்களைக்கு மாலை மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். கிராமமக்கள் அஞ்சலி செலுத்திய பின் மறைக்காளையை அடக்கம் செய்ய வாகனத்தில் கிராம மக்கள் ஊர்வலமாக சென்றபோது பெண்கள் கதறி அழுத காட்சியை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. பின் ஊரின் எல்லையில் உள்ள பழனியான்டியின் தோட்டத்தில் இறுதிகாரியங்கள் செய்யப்பட்டு மறைக்காளை மண்ணுக்குள் புதைக்கப்பட்டதோடு காளையை கட்டிபிடித்துக்கொண்டு பழனியான்டியின் மகன் அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.