ரயிலின் படியில் தொங்கியபடி பயணிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் லூயிஸ் அமுதன் எச்சரித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் ரயில்நிலையப்பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து மாற்றுப்பாதையாக விரைவு ரயில் பாதையில் நேற்று மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் கூட்டநெரிசல் அதிகம் இருந்தது. காலை 8.25 மணிக்கு கடற்கரை-திருமால்பூர் இடையிலான ரயில், வழக்கமான தடத்தில் இல்லாமல், விரைவு ரயில் தடத்தில் இயக்கப்பட்டது. பரங்கிமலை ரயில்நிலையத்தில் ரயில் வந்தபோது, பக்கவாட்டு சுவர் இடித்து 10 பயணிகள் கீழேவிழுந்தனர். இவர்களில் சிவக்குமார், நவீன், பரத் ஆகிய மாணவர்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ராயப்பேட்டை மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மற்ற 5 பேரில் மூர்த்தி, விஜய், யாசர் ஆகியோர் ராயப்பேட்டை மருத்துவமனையிலும், மற்ற இருவர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற்று வருவோரை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் சுகாதாரத்துறை முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் படியில் தொங்கும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள லூயிஸ் அமுதன், புறநகர் ரயில்களில் பாதுகாப்புப் படையினர் பயணிகளை தீவிரமாக கண்காணிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் ரயில் வாசலில் நின்றும், தொங்கியபடியும் பயணிக்கும் பயணிகளை கைது செய்வார்கள் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர்களை காவல்நிலையம் அழைத்துச்சென்று, வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார். மேலும், அவர்களுக்கு அபராதமோ அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் ரயிலில் இருந்து விழுந்ததால் இறந்தவர்கள் :
வருடம் தவறிவிழுந்தவர்கள் உயிரிழந்தவர்கள்
2016 782 83
2017 914 69
2018 449 39
மொத்தம் 2145 191