இரண்டாயிரம் கோடி போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்டுவரும் ஜாபர் சாதிக் அடிக்கடி கென்யா சென்று வந்ததை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து தீவிரமாக தேடப்பட்டுவரும் ஜாபர் சாதிக், சமீபத்தில் வெளிநாடு சென்றதை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். குறிப்பாக கென்யா நாட்டுக்கு பலமுறை அவர் சென்றதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
தனது போதைப்பொருள் தொழிலை விரிவுப்படுத்துவதற்காக கென்யா சென்றுவந்தாரா? வேறு காரணங்கள் இருக்கிறதா? என்றெல்லாம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதையடுத்து ஜாபர் சாதிக்குடன் பயணம் செய்தவர்களின் பட்டியலை அதிகாரிகள் தயார் செய்துவருகிறார்கள்.
கென்யாவுக்குச் சென்றபோது அவருடன் சென்றவர்கள் யார் என்ற பட்டியலை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தயாரித்துவருகிறார்கள். இதற்கிடையே ஜாபர் சாதிக் வீட்டுக்கு வந்த அவரது தாய், வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டதை புகைப்படம் எடுத்துச்சென்றுள்ளார்.
ஞாயிறு மாலை உறவினர் ஒருவருடன் வந்த ஜாபர் சாதிக்கின் தாய் வீட்டுக்கு வந்ததை அறிந்த போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள், சிசிடிவி காட்சிகள் மூலம், அவர் வந்த ஆட்டோ எண், அவரோடு வந்த உறவினர் குறித்து விசாரித்து வருகிறார்கள்.