ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தை தொடங்க உள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 22-ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தத்தை தொடங்க உள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதேசமயம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்தார். அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் பணிக்கு வரவேண்டும் என்றும், மருத்துவ விடுப்பைத் தவிர வேறு எந்த விடுப்பும் எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தார். உண்மைத்தன்மையை அறியாமல் மருத்துவ விடுப்பை அதிகாரிகள் வழங்கக் கூடாது என்று தெரிவித்துள்ள கிரிஜா வைத்தியநாதன், அனைத்து துறை தலைவர்களும் தங்களுக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களின் வருகைப் பதிவேட்டை காலை 10.15 மணிக்குள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று வேலை நிறுத்தம் தொடங்கப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வேலை நிறுத்தப்போராட்டத்தில் சுமார் 10 லட்சம் ஊழியர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், சி மற்றும் டி பிரிவு அரசுப்பணியாளர்கள் சங்கங்கள் ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றகப்போவதில்லை என அறிவித்துள்ளன. தலைமைச்செயலாளரை சந்தித்து பேசிய அவர்கள், எவ்வித வேலநிறுத்த போராட்டத்திலும் ஈடுபடாமல் மக்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தனர். மேலும், அரசு ஊழியர்கள் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் தலைமைச்செயலாளரிடம் அவர்கள் அளித்தனர்.