மிக விரைவில் போயஸ் தோட்டத்து இல்லத்தில் குடியேற இருப்பதாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். வேதா நிலையம் விற்பனைக்கு வருவதாக வரும் தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியிட்டுள்ள அவர், போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம், ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பூர்வீக இல்லம் எனவும், அவர் மறைந்த பிறகு ஜெயலலிதா வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அந்த வீட்டில் ஜெயலலிதாவும், தனது தந்தையான ஜெயராமனும் வாழ்ந்து வந்ததையும், அந்த வீட்டில்தான் தான் பிறந்ததையும் நினைவுகூர்ந்துள்ளார். தற்போது ஜெயலலிதா இல்லாத சூழலில் அந்த வீடு தங்களுக்கே சொந்தம் எனத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அரசியலில் நுழைந்து முதலமைச்சர் பொறுப்பு வரை உயர்ந்ததால் அவருக்கு உதவிசெய்ய பலபேர் தேவைப்பட்டதாகவும், அவருடன் இருந்து உதவிசெய்த காரணத்துக்காக அவருடைய சொத்துக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது எனவும், இது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய சட்டப்போராட்டத்துக்கு பின் வேதா நிலையம் தங்கள் வசம் வந்துள்ளதாகவும், அந்த வீட்டை கண்ணும் கருத்துமாக பராமரித்து வருவதாகவும் தெரிவித்துள்ள தீபா, கூடிய விரைவில் போயஸ் தோட்ட இல்லத்தில் குடியேற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், வேதா நிலையம் விற்பனைக்கு வரும் என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.