நாகை மாவட்டத்திற்கு இன்று வருகை தரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்க பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனின் தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் மிரட்டி வரசொல்லுவது போன்ற ஆடியோ வைரலானது.
அதில், கல்லூரி மாணவ மாணவிகள் காலை 6.30 மணிக்கெல்லாம் வரவேண்டும், என கல்லூரி முதல்வர் பேசி இருந்தார். ஆனால் தற்போது வரை மாணவ மாணவிகள் வராமல் கல்லூரி வெறிச்சோடி காணப்படுகிறது. இதையடுத்து வராத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேர்வெழுத முடியாது, வருகை பதிவேட்டில் கை வைப்பேன் என மீண்டும் மிரட்டல் ஆடியோவை கல்லூரி முதல்வர் இளவேந்தன் வெளியிட்டார்.
இந்த ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கல்லூரி முதல்வர் இளவேந்தனிடம் கேட்டபோது.. ஆளுநர் வருவதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. நாகை ஆதர்ஷ் தனியார் பள்ளியில் நடைபெறும் கண் சிகிச்சை முகாமை ஒருங்கிணைப்பதற்காக மாணவர்களை வரச் சொன்னதாக அவர் நம்மிடம் தெரிவித்தார்.