தான் பேசுவதை கேட்க வைக்கவே பெரிய பாடாக இருப்பதாக ராமநாதபுரம் ஆட்சியர், கிராமத்து நடையில் கல கலப்பாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ராமநாதபுரத்தில் ராஜா பள்ளி மைதானத்தில் புத்தக காட்சி நிறைவு விழா நடந்தது. இதில், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர். அனைவருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜவஹர் சிறுவர் மன்ற மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏ.டி.எஸ்.பி., உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அப்போது 12 நாட்கள் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை அதிகாரிகள், சிறப்பாக பல் சுவை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மேடையில் பேசிய மாவட்ட ஆட்சியர், 5ஆவது புத்தகத் திருவிழா ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமைத் தேடித்தரும் வகையில் நடைபெற்றுள்ளது. 1 லட்சத்து 44 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள், 3 ஆயிரம் கல்லூரி மாணவ, மாணவிகள், 73 ஆயிரம் பொதுமக்கள் என 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளார்கள். 110 அரங்குகளில் 2 லட்சத்து 48 ஆயிரம் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் மதிப்பு ரூபாய் 6 கோடியே 20 இலட்சம் ஆகும். மேலும் இந்த புத்தகத் திருவிழா வளாகத்தில் மகளிர் குழுக்கள் தயார் செய்த உணவு பொருட்கள், ரூபாய் 13 இலட்சத்திற்கு விற்பனையாகிவுள்ளது என பேசினார்.
மேலும், கலகலப்பாக பேசிய அவர், ”ஒரு அரங்கத்திற்குள் நாம் மேடை ஏறிப் பேசும்பொழுது 10 பேர் இருக்கும் அரங்கத்தில், 10 பேரும் நமது பேச்சை கேட்க வேண்டும். ஆனால், நான் பேசும்பொழுது எனது பேச்சை கேட்க வைப்பதற்கு பெரிய பாடா இருக்கே” என கலகலப்பாக பேசி அரங்கத்தையே உற்சாகப்படுத்தினார். வெளி மாநிலத்தைச் சேர்ந்த ராமநாதபுரம் ஆட்சியர் கிராமப்புற நடையில் பேசி கலகலப்பூட்டிய சம்பவம், அங்கு மேடையில் இருந்தவர்களையும், பார்வையாளர்களையும் கல கலப்பாக்கியதோடு, கரகோஷம் எழுப்பி அரங்கத்தை அதிரவைத்து நகைப்புக்குள்ளாக்கியது.
மேலும், இந்த புத்தக திருவிழாவை பற்றி யாரிடம் கேட்டாலும் 'நல்லா இருக்கு' என்று சொல்லவில்லை, 'சூப்பரா இருக்கு' என்று சொன்னார்கள். இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் முன்னேற்றத்தில் ஒரு படி மேலே சென்றுள்ளது என்றே கூறலாம், என மாவட்ட ஆட்சியர் பேசினார். மாவட்ட ஆட்சியரின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.