அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணியின் வலது கரமான கோவை வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கே.சி.பி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணியுடன் மிகவும் நெருக்கமானவர் வடவள்ளி சந்திரசேகர். பொறியாளரான இவர், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவின் வெளியீட்டாளராக உள்ளார். மேலும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராகவும் இருக்கிறார். இவரது மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
முன்னதாக மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணியின் வீட்டில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய போது சந்திரசேகர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் வருமான வரித்துறை முதன் முறையாக சோதனையில் ஈடுபட்டது.
அதிமுகவின் மிக முக்கிய நபர்களில் ஒருவராக திகழும் சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 11 மணி முதல் சோதனை நடத்தினர். சந்திரசேகர் வீடு மட்டுமின்றி அவரது தந்தையின் இல்லம், அவர் தொடர்புடைய கேசிபி நிறுவனம் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனை நடைபெற்றதை அடுத்து சந்திரசேகரின் ஆதரவாளர்களும் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்களும் வீட்டின் முன்பு குவிந்தனர். இதையடுத்து 5 அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் மதியம் சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. ஆனால், அந்த ஆவணங்கள் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
சோதனை மேற்கொண்டு 5 அதிகாரிகளில் இருவர் நேற்று மாலை வெளியே சென்றுவிட்ட நிலையில், மூவர் மட்டும் இரவு 12.30 மணியை தாண்டியும் சோதனையை நடத்தி வந்தனர். பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் நடந்துவந்த இந்த சோதனை 13 மணி நேரத்திற்குப் பிறகு நிறைவுற்றது.
அதிமுக பொதுக்குழு வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படும் எஸ்பி.வேலுமணியின் வலது கரமான சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் வரும் 11 ஆம் தேதி வரை இது போன்று அடிக்கடி சோதனைகள் தொடரலாம் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சந்திரசேகர் தொடர்புடைய கே.சி.பி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது. 19 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது