இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதி அளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் இரண்டு வாரங்களாக போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டங்களின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லி, பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் போராட்டம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசித்தாக தெரிகிறது. அப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது அதிமுகவின் நீண்ட நாள் கோரிக்கை எனவும், அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமித் ஷாவிடம் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்த அமித் ஷா, சரியான நேரத்தில் இது தொடர்பான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அது குறித்த தெளிவான விளக்கம் அளிப்பதற்கான பரப்புரை கூட்டம் நடத்துவது என பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.