தமிழன் என்று சொல்லிவிட்டு தமிழ் தேர்வில் வெற்றிப்பெற முடியாதா? : நீதிமன்றம் கேள்வி

தமிழன் என்று சொல்லிவிட்டு தமிழ் தேர்வில் வெற்றிப்பெற முடியாதா? : நீதிமன்றம் கேள்வி
தமிழன் என்று சொல்லிவிட்டு தமிழ் தேர்வில் வெற்றிப்பெற முடியாதா? : நீதிமன்றம் கேள்வி
Published on

தமிழகத்தில் அலுவல் மொழியாக தமிழ் இருப்பதால், ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு என்று சொல்ல முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

தேனி டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் தேனி மின் பகிர்மான வட்டத்தில் 2018-ல் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். இவர் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயிலாததால், பணியில் சேர்ந்து 2 ஆண்டிற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழித் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் ஜெய்குமாரை பணிலிருந்து விடுவித்து கண்காணிப்பு பொறியாளர் கடந்த ஜூன் 16ஆம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் சேர்த்து பணப்பலன்களை வழங்க உத்தரவிக்கோரி ஜெய்குமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், "பணியில் சேர்ந்து 2 ஆண்டில் மொழித்தேர்வில் வெற்றிப்பெறாவிட்டால் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார் என மின்வாரிய விதியில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மனுதாரர் தன்னை தமிழன் என்றும், தாய் மொழி தமிழ் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவரால் தமிழ் தேர்வில் வெற்றிப்பெற முடியவில்லை. தமிழ் பேச மட்டும் தெரிந்தால் போதாது, படிக்கவும், எழுதவும் தெரிய வேண்டும்.

தான் பணியில் நீடிக்க மொழித் தேர்வில் வெற்றிப்பெறுவது கட்டாயம் எனத் தெரிந்தும் மனுதாரர் அதில் ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளார். தமிழகத்தில் அலுவல் மொழி தமிழ், அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் தான் நடைபெறுகிறது. மின்வாரியத்திலும் அப்படியே. இதனால் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு என்று சொல்ல முடியாது. மின்வாரியத்தின் நடவடிக்கை தவறல்ல. இருப்பினும் மனுதாரரை பணியிலிருந்து நீக்கினால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும். அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கலாம். டிஎன்பிஎஸ்சி அடுத்து நடத்தும் மொழித் தேர்வில் அவர் பங்கேற்க வேண்டும். அதில் தோல்வி அடைந்தால் அவரை பணி நீக்கம் செய்யலாம். எனவே மனுதாரருக்கு டிஎன்பிஎஸ்சி அடுத்து நடத்தும் மொழித்தேர்வு வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com