மக்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் பாழடைந்த நிலையில் குவியல் குவியலாக குவிந்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் சொன்னபடி விலையில்லா மின்விசிறி, கிரைண்டர் மற்றும் மிக்ஸி வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தியது.
அதன்படி அனைத்து இலவச திட்டங்களும் மக்களிடம் சென்றடைந்தது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்தது. இந்நிலையில், செங்கல்பட்டு பழைய தாலுகா அலுவலகத்தில் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டித்தில் மக்களுக்கு வழங்க வேண்டிய மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி உள்ளிட்ட விலையில்லா இலவச பொருட்கள் பாழடைந்து கிடக்கிறது.
அதே போல் செங்கல்பட்டு காவலர் குடியிருப்புக்கு எதிரே உள்ள செங்கல்பட்டு நகராட்சியின் கீழ் செயல்படும் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியிலும் மக்களுக்குச் சென்றடைய வேண்டிய விலையில்லா பொருட்கள் பாழடைந்து கேட்பாரற்று கிடக்கிறது. இதெல்லாம் வருவாய்த் துறைக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் தெரிந்திருந்தும் கண்டு கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு அதை ஆய்வு செய்து தரமாக இருப்பின் ஏழை எளிய மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.