கோவை மற்றும் நெல்லை மாநகராட்சிகளின் திமுக மேயர்கள் தங்களது பதவியை சில தினங்களுக்கு முன் ராஜினாமா செய்தனர். மேயர்கள் மீது தொடர் புகார்கள் எழுந்ததன் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதால் அவர்கள் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகின.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயரும் தற்போது இதே சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். தற்போது காஞ்சிபுரம் மேயராக இருப்பவர் மகாலட்சுமி. இவருக்கு ஆரம்பம் முதலே சிக்கல் இருந்தது. திமுக இவருக்கு மேயராக சீட் வழங்கிய பொழுது, மகாலட்சுமிக்கு எதிராக திமுகவை சேர்ந்த சூர்யா என்பவர் போட்டியிட்டார். அவருக்கு எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுகவை சேர்ந்த சில கவுன்சிலர்களின் ஆதரவு இருந்ததால் மகாலட்சுமிக்கு மேயர் தேர்தலில் இருந்தே சோதனை காலம் தொடங்கியது.
மாநகராட்சிகளில் நடைபெறும் பல்வேறு பணிகளில் மாமன்ற உறுப்பினர்களுக்கு குத்தகைக்கு அளித்த விவகாரமே தற்போது நடைபெற்று வரும் பிரச்னைக்கு பெரிய காரணமாக கூறப்பட்டு வருகிறது. மாநகராட்சி ஆணையராக உள்ள செந்தில் முருகன் மேயர் தரப்பிற்கு மட்டும் ஆதரவாக இருப்பதாகவும் மற்ற கவுன்சிலர்களை கண்டுகொள்ளவில்லை எனவும் புகார் எழுந்தது. கவுன்சிலர்கள் நேரடியாக ஆணையரை சந்திக்க கூட முடிவதில்லை என்ற புகாரும் இருந்து வருகிறது.
இந்நிலையில், திமுக கவுன்சிலர்களுக்கும் மேயருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பான்மை இருந்தும் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார் மேயர் மகாலட்சுமி.
இதனிடையே, திமுக மற்றும் எதிர்க்கட்சியைச் சார்ந்த அ.தி.மு.க, பா.ம.க மற்றும் பா.ஜ.க கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இப்படி மேயர் தரப்பிற்கும் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே பிரச்னைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதனையடுத்து, காஞ்சிபுரம் திமுக கவுன்சிலர்களை அழைத்து அமைச்சர் கே.என்.நேரு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனாலும், மேயர் எதிர்ப்பு திமுக கவுன்சிலர்கள் பின்வாங்கவில்லை. இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 18 கவுன்சிலர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கிய அவர்கள், அதிமுக கவுன்சிலர்களுடன் கைகோர்த்து மேயர் மகாலட்சுமியை மாற்ற போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதனால், நெல்லை, கோவையை தொடர்ந்து காஞ்சிபுரத்திலும் மாநகராட்சி மேயர் ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.