சசிகலாவுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என முடிவாகி விட்டது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை மாநகர் அதிமுகவின் பகுதி மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் விண்ணப்பங்களை வழங்கினர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ பேசும்போது... மதுரை மாநகர் மாவட்ட பகுதி பேரூர் கழகத்திற்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதுவரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெற்றது இல்லை. ஆனால் நேற்று வைகை ஆற்றில் 2பேர் உயிரிழந்தது மிகப்பெரிய மோசமான சம்பவம். இந்த துயர சம்பவத்திற்கு மாவட்ட நிர்வாகம், காவல்துறை பொதுப்பணித்துறை தான் காரணம். அவர்கள் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
பொதுமக்கள் அழகரை தரிசிக்க மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. அழகரை தரிசிக்க அரசு அதிகாரிகளுக்கு, முக்கியஸ்தர்களுக்கு பாதை ஒதுக்கிவிட்டு மக்கள் செல்ல பாதை வசதி ஏற்படுத்தித் தரவில்லை. இந்த சம்பவத்தை தடுத்திருக்கலாம். ஆற்றில் தண்ணீர் வரத்தை குறைத்திருக்கலாம்.
வைகை ஆற்றில் தண்ணீர் அதிகளவு வந்ததால் பொதுப்பணித் துறையினர் பனையூர் கால்வாய்க்கு நீர் செல்லும் ஷட்டரை திறந்து தண்ணீரை வெளியேற்றி இருக்கலாம். அதை மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை. உயர் அலுவலர்கள் அவர்களின் குடும்பத்தினர் சாமி பார்க்க வசதி ஏற்படுத்திவிட்டு, பொதுமக்கள் வருகிற பாதையை அடைத்து விட்டனர். அனைத்துத் துறைகளும் இந்த சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 5 லட்சம் போதாது. 25 லட்ச ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி தன்னை நிலை நிறுத்த வேண்டிய வேலையை செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மங்கி கொண்டுள்ளது. அதனால் அவர்கள் இதுபோல செய்து கொண்டுள்ளனர் என்றவரிடம் சசிகலா குறித்தும் தீர்ப்பு குறித்தும் கேட்ட கேள்விக்கு...
அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் சம்மந்தம் இல்லை என முடிவாகி விட்டது. அதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. நாட்டில் எத்தனோயோ பிரச்னைகள் உள்ளது. அதையெல்லாம் விட்டுவிட்டு இந்தக் கேள்வியையே கேட்கிறீர்கள், நாட்டில் நடப்பது குறித்து எதிர்க்கட்சியை கேளுங்கள் என சசிகலா குறித்த கேள்வியால் பதட்டமடைந்து கோபமாக பேசினார்.