இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தமிழ்நாடு அரசு தனக்கு வழங்கிய 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை தான் படித்த கல்லூரிகளுக்கு தானமாக வழங்கியுள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு விழா நடத்தியது.
அதில், இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்ததாகக் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 விஞ்ஞானிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்தது. சந்திரயான் - 3 திட்ட இயக்குநரான விழுப்புரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்து வேலுவும் தமிழ்நாடு அரசின் பரிசுத் தொகையை பெற்றிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு வழங்கிய 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை தான் படித்த நான்கு கல்லூரிகளுக்கு வீரமுத்துவேல் வழங்கியுள்ளார். அதன்படி விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்ஐடி, சென்னை ஐஐடி கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்திற்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை பகிர்ந்து வழங்கியுள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவின் இந்த செயலுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.