சந்திரயான் 3 விண்கலம் பூமியில் இருந்து நிலவு வரையிலான 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை அடைவதற்கு 41 நாட்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி முதலாவது சுற்று வட்டப் பாதைக்கு சந்திரயான் விண்கலம் உயர்த்தப்பட்டது. சந்திரயான் திட்டத்தில் எரிபொருளை மிச்சப்படுத்துவதற்காக ஸ்க்ரீன் ஷாட் எனப்படும் Orbit Raising Maneuver எனப்படும் 'பாதை உயர உயர்த்தல்' என்னும் வினை மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் இரண்டாவது முறையாக சந்திரயான் 3 விண்கலத்தின் 'பாதை உயர உயர்த்தல்' நேற்று (ஜூலை 17) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பூமியின் இரண்டாவது சுற்று வட்டப் பாதையில் இரண்டாவது சுற்றிற்கு சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. சந்திரயான் விண்கலத்தை எல்.வி.எம் 3 ராக்கெட் 173 கிலோ மீட்டர் உயரத்தில் புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்திய நிலையில், இஸ்ரோவால் சந்திரயான் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள முதல் கட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
இதையடுத்து சந்திரயான் 3 விண்கலத்தில் இரண்டாவது முறையாக உந்து விசை அமைப்பு முடுக்கமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்திரயான் 3 விண்கலம் பூமியை இரண்டாவது முறை சுற்றி வந்துள்ளது என புரிந்து கொள்ளலாம். பூமியின் குறைந்த வட்டப் பாதையான பெரிஜியின் உயரம் 173 கிலோ மீட்டரில் இருந்து 226 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. விண்கலம் சீராக திட்டமிட்டபடி இயங்குவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திராயன் 3 விண்கலம் இப்போது அதிகபட்ச தூரமாக 41,603 கிமீ என்ற அளவிலும், குறைந்தபட்ச தூரமாக 226 கிமீ என்ற அளவிலும் நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றி வருகிறது. மூன்றாவது சுற்றுப் பாதையை உயர்த்தும் பணி மீண்டும் இன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றாவது சுற்று வட்டப் பாதைக்கு விண்கலத்தை உயர்த்தும் போது பூமியிலிருந்து அதிகபட்ச தொலைவு 57,000 கி.மீ என அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.