ஈஷா அறக்கட்டளை சார்பில் 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 2 வாகனங்கள் ஆகியவை கோவையில் அமைச்சர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட தகவலில், 'கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஈஷா சார்பில் முதல்கட்டமாக 500 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், பி.பி.இ கிட்கள், முகக் கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டன. அத்துடன், கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்காக 2 வாகனங்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு இன்று கோவையில் நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் ராமசந்திரன் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும், கோவை அரசு மருத்துவமனைக்கு மட்டும் 500 பி.பி.இ. கிட்கள், 5,000 N95 முகக்கவசங்கள், 500 CPAP முகக்கவசங்கள் ஆகியவை வழங்கப்பட்டன.
இது தவிர, ஈஷா சார்பில் கோவையில் உள்ள கிராமங்களில் பல்வேறு நிவாரணப் பணிகளை ஈஷா தன்னார்வலர்கள் நேரடியாக செய்து வருகின்றனர். கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகப் பயிற்சிகளை கற்றுக்கொடுப்பது, முன்களப் பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதில் அடங்கும்.
மேலும், தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பில் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா நோயாளிகளை தகனம் செய்யும் சேவையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது' என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.