'கொரோனா 2-வது அலை தீவிரம் அடைந்து இருக்கும் இக்கட்டான சூழலில் ஈஷா அவுட்ரீச் அமைப்பு கோவையில் 43 கிராமங்களில் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதன்மூலம், 17 பஞ்சாயத்துக்களில் உள்ள சுமார் 2 லட்சம் கிராம மக்கள் பயன்பெறுகின்றனர்' என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை மேலும் அளித்த தகவல்:
"பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் என பல தரப்பினருக்கும் உதவும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில் ஈஷா பிரம்மாச்சாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட ஏராளமானோர் அர்ப்பணிப்புடன் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன்படி, கீழ்கண்ட நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1. தினமும் சுமார் 1.2 லட்சம் பேருக்கு நிலவேம்பு அல்லது கப சுர குடிநீர் வழங்கப்படுகிறது.
2. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் வகையில் ‘சிம்ம க்ரியா’ மற்றும் ‘சாஷ்டாங்கா’ என்ற 2 எளிய யோக பயிற்சிகள் 1.5 லட்சம் பேருக்கு கற்றுக்கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
3. ஒலிப்பெருக்கிகளுடன் கூடிய ஆட்டோக்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகள் மற்றும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
4. 2,500 முன் களப்பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் சானிடைசர்கள் வழங்கப்படுகிறது.
5. 7 அரசு மருத்துவமனைகளிலும் தினமும் கிருமி நாசினிகள் தெளிப்பதற்கு உதவிகள் செய்து தரப்படுகிறது.
6. கொரோனா பாதித்த நோயாளிகளை கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று உதவிகள் செய்யப்படுகிறது.
7. தேவை ஏற்பட்டால், கட்டுப்பாடு பகுதிகளில் இருக்கும் கொரோனா நோயாளிகள் மற்றும் அப்பகுதி மக்களுக்கும் தேவையான உதவிகள் செய்து தரப்படுகிறது.
ஈஷாவின் கொரோனா நிவாரணப் பணிகள் 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று ஈஷா அறக்கட்டளையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.