தமிழ்நாட்டில் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்கிற அளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மறுசீரமைக்க முடிவு செய்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன். அதற்கான அறிவிப்பை நேற்று முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.
ஏற்கெனவே, 144 மாவட்டச் செயலாளர்களைக் கொண்டிருக்கும் விசிக, இனி 234 மாவட்டச் செயலாளர்களுடன் பயணிக்கப் போகிறது. எதற்காக இந்தச் சீரமைப்பு? விரிவாகப் பார்ப்போம்.
திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மாவட்டக் கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டில் வருவாய் மாவட்டங்கள் 38 இருந்தபோதும், கட்சிகள் நிர்வாக வசதிக்காக அதையும் பல மாவட்டங்களாகப் பிரித்து நிர்வாகிகளை நியமித்திருப்பார்கள். திமுகவில் மொத்தமாக 72 மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். அதிமுகவை எடுத்துக்கொண்டால், 82 பேர் மாவட்டச் செயலாளர்களாகப் பதவி வகிக்கிறார்கள்.
அந்தவகையில் விசிகவில் இதுவரை, 144 பேர் மாவட்டச் செயலாளர்களாகப் பதவி வகித்தார்கள். இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒருவர் மற்றும் கூடுதலாக மாநகர, ஒன்றிய, வட்ட அளவில் என மொத்தமாக 144 பேர் மாவட்டச் செயலாளர்களாக இருந்தார்கள்.
இந்த நிலையில், இந்த எண்ணிக்கையை 234 ஆக உயர்த்த முடிவு செய்திருக்கிறார் கட்சியின் தலைவர் திருமாவளவன். அதாவது ஏற்கெனவே இருக்கின்றன 144 மாவட்டச் செயலாளர்களுடன் புதிதாக 90 பேரை புதிதாக நியமிக்க முடிவு செய்திருக்கிறார். பழைய மாவட்ட செயலாளர்களில் ஒருசிலர் மாற்றப்பட இருப்பதாகவும் கூறியிருக்கிறார் திருமாவளவன்.
அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மாவட்ட செயலாளரை நியமிக்க முடிவு செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாது, அவர்களில் 10 சதவிகிதம் பெண்கள், 10 சதவிகிதம் தலித் அல்லாதவர்கள், 25 சதவிகிதம் இளைஞர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. விசிகவைப் பொறுத்தவரைக்கும் ஒரு மாவட்ட செயலாளர் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாகப் பதவி வகிப்பார்.
ஏற்கெனவே, நியமிக்கப்பட்ட 144 மா.செக்கள் இன்னும் மூன்று ஆண்டுகளைக் கடக்காத நிலையில், இந்தப் புதிய நியமனங்கள் செய்யப்படவிருக்கின்றன. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பேசும்போது, ``விசிக நல்ல கட்டமைப்பு உள்ள இடங்களில், கட்சி நிர்வாகிகளாக இருப்பவர்களில் பலர் விஜய் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள். ஒருவேளை, விசிகவில் அவர்கள் நினைத்த பதவிக்கு வரமுடியாதபோது, அவர்கள் விஜய் கட்சிக்கு தாவுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அதனால்தான், இதுபோன்ற மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கியிருக்கிறார்’’ என்கிறார்கள்.
ஆனால் விசிக தரப்பில் இதுகுறித்து பேசும்போது, ``இந்த மறுசீரமைப்பு எல்லாம் ஓராண்டுக்கும் மேலாக பேசப்பட்டு வந்த விஷயம்தான். நாடாளுமன்றத் தேர்தல், மது ஒழிப்பு மாநாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தள்ளிக்கொண்டே போனது. மற்றபடி விஜய்க்கும் இந்த மறுசீரமைப்புக்கும் எந்த சம்மந்தமுமில்லை.
எங்கள் கட்சியில் இருக்கின்றவர்கள் எல்லாம் கொள்கை ரீதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பயணிப்பவர்கள். அவர்கள் யாரும் பதவிக்காக மாற்றுக் கட்சிக்கு செல்வதற்கு வாய்ப்பே இல்லை. விஜய் மீதுள்ள அபிப்ராயத்தின் காரணமாக ஒன்றிரண்டு இளைஞர்கள் வேண்டுமானால் தவெகவில் இணைந்திருக்கலாம். ஆனால், எங்களுடைய முடிவு விஜய்க்கானது அல்ல. விஜய் கட்சி தொடங்கப்போகிறார் என்கிற செய்திகள் வெளியாவதற்கு முன்பே எடுக்க முடிவுகள்தான் இவை.
எங்கள் கட்சி நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே போகிறது. தகுதியானவர்கள் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால், பதவிகளையும் அதிகப்படுத்த வேண்டியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், எங்கள் கட்சிக் கட்டமைப்பில் இன்னும் பல மாற்றங்களைக்கொண்டு வரவிருக்கிறோம். பூத் கமிட்டி அளவில் நிர்வாகிகளை நியமித்து, முழுக்க முழுக்க தேர்தலுக்கான கட்டமைப்பாக எங்களின் கட்சிக் கட்டமைப்பு மாறவிருக்கிறது’’ என்கிறார்கள்.